/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முன்னுக்குப்பின் முரணாக அறிக்கை போலீஸ் மீது எச்.ராஜா குற்றச்சாட்டு
/
முன்னுக்குப்பின் முரணாக அறிக்கை போலீஸ் மீது எச்.ராஜா குற்றச்சாட்டு
முன்னுக்குப்பின் முரணாக அறிக்கை போலீஸ் மீது எச்.ராஜா குற்றச்சாட்டு
முன்னுக்குப்பின் முரணாக அறிக்கை போலீஸ் மீது எச்.ராஜா குற்றச்சாட்டு
ADDED : நவ 07, 2025 05:54 AM
கோவை மாணவி வன்கொடுமை சம்பவம்
மதுரை: ''கோவை மாணவி வன்கொடுமை சம்பவம் குறித்த போலீசாரின் அறிக்கை முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. தமிழக போலீஸ் துறை மீது நம்பிக்கை இல்லை,'' என, கோவை மாணவி வன்கொடுமையை கண்டித்து பா.ஜ., மகளிரணி சார்பில் மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா குற்றம்சாட்டினார்.
அவர் மேலும் பேசியதாவது: தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்ந்து நடக்கிறது. தேசிய அளவிலான புள்ளிவிவரப்படி தமிழகத்தில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறாள். இரண்டு மணி நேரத்திற்கு ஒரு பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறாள்.
சமீப காலமாக தமிழகத்தில் எந்த சம்பவம் நடந்தாலும் போலீசார் அளவுக்கு அதிகமாக 'ரீயாக்ட்' செய்வது வழக்கமாக உள்ளது. அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமையில் ஒருத்தர் தான் குற்றவாளி என்றனர். பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக இருவரை என்கவுண்டரில் கொன்றாலும் வழக்கு சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட்டது. தமிழகத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளை உச்சநீதிமன்றம் கவனித்து வருகிறது.
சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்கலாமே திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கை தமிழக அரசே சி.பி.ஐ.,யிடம் ஒப்படைத்தது. கோவை மாணவி வன்கொடுமை வழக்கையும் சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்கலாமே. இந்த வழக்கில் போலீஸ் துறையின் அறிக்கை முன்னுக்கு பின் முரணாக உள்ளது. முதலில் வந்த அறிக்கையும் கமிஷனர் சொல்வதும் வேறு வேறாக உள்ளது.
மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டம் நடத்திய போது பிரதமரின் வாகனத்தை தாக்குவேன் என சொன்னார்கள். ஏன் இன்னும் கைது செய்யவில்லை. தி.மு.க., ஆட்சிக்கு வரும் முன் 2021ல் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் ஆண்டுக்கு 2000 என்ற அளவில் இருந்தது. தற்போது 9000 ஆக அதிகரித்துள்ளது. 4 மாதங்களில் பதவி முடியப்போகிறது என்றாலும் இப்போதே முதல்வர் ஸ்டாலின் பதவியை ராஜினாமா செய்வது கவுரவமாக இருக்கும். இவ்வாறு பேசினார்.

