நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளை தடுக்க வழக்கு
நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளை தடுக்க வழக்கு
UPDATED : அக் 09, 2026 06:11 PM
ADDED : அக் 09, 2026 05:06 PM
மதுரை:
நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளை தடுக்க தாக்கலான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் அறிக்கை சமர்ப்பிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:
தமிழக நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. அங்குள்ள நெல் மூடைகளை அரிசி ஆலைகள் மற்றும் கிடங்குகளுக்கு விரைவில் எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மழையில் நனைந்து வீணாகாமல் நெல் மூடைகளை பாதுகாக்க வேண்டும்.
கொள்முதல் நிலையங்கள், திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் நெல் எடை போடுவதில் தாமதம் மற்றும் முறைகேடுகளை தடுக்க வேண்டும். அங்குள்ள அலுவலர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க பறக்கும் படைகளை அமைக்க வேண்டும்.
கொள்முதல் நிலையங்களை சுற்றிலும் மழைநீர் தேங்குவதை தடுக்க வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு பிறப்பித்த உத்தரவு: இவ்விவகாரத்தில் 2017ல் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதை நிறைவேற்ற மேற்கொண்ட நடவடிக்கை குறித்து மத்திய வேளாண்துறை செயலர், தமிழக நுகர்பொருள் வாணிப கழக இயக்குனர் நவ.,6ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.
