/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சவாலே சமாளி: கால்நுாற்றாண்டு கனிமவள அபராதம் ரூ.10 கோடியை வசூலிக்க போராடும் மாவட்ட நிர்வாகம்
/
சவாலே சமாளி: கால்நுாற்றாண்டு கனிமவள அபராதம் ரூ.10 கோடியை வசூலிக்க போராடும் மாவட்ட நிர்வாகம்
சவாலே சமாளி: கால்நுாற்றாண்டு கனிமவள அபராதம் ரூ.10 கோடியை வசூலிக்க போராடும் மாவட்ட நிர்வாகம்
சவாலே சமாளி: கால்நுாற்றாண்டு கனிமவள அபராதம் ரூ.10 கோடியை வசூலிக்க போராடும் மாவட்ட நிர்வாகம்
ADDED : ஏப் 10, 2025 06:40 AM

மதுரை: கனிமவளத்துறையில் கால்நுாற்றாண்டாக நிலுவையில் உள்ள அபராதத் தொகையை சட்டப் போராட்டம் நடத்தி வசூலிப்பது மாவட்ட நிர்வாகத்திற்கு சவாலான பணியாக உள்ளது.
மதுரை மாவட்டத்தில் பல ஆண்டுகளாக ஆற்று மணல், கல்குவாரிகளில் ஜல்லிக்கற்கள் கடத்துவது நடக்கிறது. அவ்வாறு கடத்தும் வாகனங்களை வருவாய், கனிம வளத்துறை அதிகாரிகள் அவ்வப்போது பிடித்து நடவடிக்கை எடுப்பர்.
அனுமதி பெறாத வாகன உரிமையாளர்களுக்கு ரூ. பல ஆயிரங்கள் அபராதம் விதிக்கப்படும். அதனை செலுத்த விரும்பாதவர்கள் கோர்ட்டை நாடுவர். கோர்ட் அப்போதைய தீர்வாக ரூ.5 ஆயிரம் வரை செலுத்தி வாகனத்தை விடுவிக்கும்படி தெரிவிக்கும். மீதித்தொகையை வழக்கு முடிந்த பின் பெற உத்தரவிடும். இதுபோன்ற காரணங்களால் பல வழக்குகளில் அபராத தொகை நிலுவையில் உள்ளது. இவ்வகையில் 25 ஆண்டுகளாக பலர் நிலுவையில் வைத்துள்ள தொகை ரூ.10 கோடிக்கும் மேல் உள்ளது.
இவர்களில் அபராதம் விதிக்கப்பட்ட சிலர் இறந்திருப்பர். இத்தொகையை செலுத்த வேண்டிய அவர்களின் வாரிசுகளோ அதில் ஆர்வம் காட்டாமல் இருப்பர். இப்படி கால் நுாற்றாண்டாக நிலுவையில் உள்ள தொகையை வசூலிக்க, கலெக்டர் சங்கீதா பொறுப்பேற்ற பின் தீவிர நடவடிக்கை மேற்கொண்டார். இதற்கென தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தாசில்தார்கள் மூலம் வசூலிக்கப்படுகிறது.
நீண்ட கால அபராத தொகையை வசூலிப்பது சவாலான பணியாக உள்ளதென வருவாய்த் துறையினர் தெரிவிக்கின்றனர். தனி அலுவலர்களை நியமித்த பின் கொஞ்சம் கொஞ்சமாக பணம் வசூலாகிறது. இருப்பினும் வழக்கு, மேல்முறையீடு என சட்ட நடவடிக்கைகளை முடித்து அபராதத்தை வசூல் செய்வது 'கல்லில் நார் உரிப்பதைப் போன்றுள்ளது' என்கின்றனர். தனி அலுவலர்களை நியமித்த பின்பே, ரூ.10 லட்சம் அளவுக்காவது அபராத தொகை கொஞ்சம் கொஞ்சமாக பெறப்பட்டுள்ளது. மேலும் வசூலிக்க இப்பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.
'கனிம வளங்களை கடத்தினால், ஆர்.டி.ஓ., அபராதம் விதிப்பார். அதனை டி.ஆர்.ஓ., கலெக்டர், கனிமவளத்துறை இயக்குனர், கமிஷனரிடம் மேல்முறையீடு செய்து அபராதத் தொகையை குறைக்க போராடுவர். இதற்கு அதிக காலம் பிடிப்பதால் மெதுவாகவே வசூலாகிறது. இருப்பினும் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொள்வதால் நிலுவையில் இருந்த அபராதம் இந்தளவாவது வசூலாகி இருக்கிறது' என்றனர்.

