/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சென்னை --- பினாங்கு நேரடி விமான சேவை
/
சென்னை --- பினாங்கு நேரடி விமான சேவை
ADDED : டிச 04, 2024 08:34 AM
மதுரை : சென்னையில் இருந்து மலேசியாவின் பினாங்கு மாநிலத்திற்கு தினசரி நேரடி விமான சேவையை இண்டிகோ விமான நிறுவனம் டிச. 26 முதல் துவக்க உள்ளது. இதன்மூலம் சுற்றுலா பயணிகள், வர்த்தகர்கள் கோலாலம்பூர் செல்லாமல் நேரடியாக பினாங்கு செல்லலாம்.
186 பயணிகள் அமரும் வகையிலான 'ஏர்பஸ் 320' விமானம் சென்னையில் இருந்து இந்திய நேரப்படி அதிகாலை 2:15 மணிக்கு புறப்பட்டு மலேசிய நேரப்படி காலை 8:30 மணிக்கு பினாங்கு செல்லும். மறுமார்க்கத்தில் மலேசிய நேரப்படி காலை 9:30 மணிக்கு புறப்பட்டு இந்திய நேரப்படி காலை 10:35 மணிக்கு சென்னை வரும். ஒருவழிகட்டணம் ரூ. 10 ஆயிரம்.
பினாங்கு மாநாடு கண்காட்சி அமைப்பின் சி.இ.ஓ., அஷ்வின் குணசேகரன் கூறுகையில் ''பயணிகள் பினாங்கு மாநிலம் வந்தபின் வருகை விசா பெறலாம். டிச. 31 வரை விசா தேவையில்லை. வரவேற்பை பொறுத்து இலவச விசா காலம் நீட்டிக்கப்படும்'' என்றார்.
இண்டிகோ நிறுவன மூத்த மேலாளர் ஸ்ரீனிவாசன் கூறுகையில் ''மத்திய கிழக்கு நாடுகள், டில்லி, கோல்கட்டாவில் இருந்து வரும் விமானங்களுடன் பினாங்கு விமானம் இணைக்கப்பட்டுள்ளது. மற்ற நகரங்களில் இருந்து வரும் பயணிகள் சென்னையில் இருந்து இணைப்பு விமானமாக பினாங்கு செல்லும் விமானத்தை முன்பதிவு செய்யலாம்'' என்றார்.
காரைக்குடி செட்டிநாடு பகுதியை சேர்ந்த பலர் பினாங்கில் வசிக்கின்றனர். அவர்களுக்கு இந்த நேரடி விமான சேவை வசதியாக இருக்கும்.