/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'சென்னை - ராமேஸ்வரம் வந்தே பாரத் வேண்டும்'
/
'சென்னை - ராமேஸ்வரம் வந்தே பாரத் வேண்டும்'
ADDED : மார் 01, 2024 01:15 AM

மதுரை:'சென்னை - ராமேஸ்வரம் இடையே 'வந்தே பாரத்' ரயில் இயக்க வேண்டும்' என, தெற்கு ரயில்வே மதுரை கோட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் எம்.பி.,க்கள் வலியுறுத்தினர்.
மதுரையில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு, மண்டல பொது மேலாளர் சரத் ஸ்ரீ வஸ்தவா தலைமை வகித்தார். இதில், திருச்சி, மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் இருந்து எம்.பி.,க்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
தேனி அ.தி.மு.க., - எம்.பி., ரவீந்திரநாத், ''சென்னை - போடி வாரம் 3 நாட்கள் இயக்கப்பட்டு வரும் ரயிலை தினசரி இயக்க கோரிக்கை வைத்துள்ளேன்,'' என்றார்.
ராஜ்யசபா ம.தி.மு.க., - எம்.பி., வைகோ, ''மதுரை - கோவை இடையே அகலப்பாதை கொண்டு வந்து ஐந்தாண்டுகளாகி விட்டது. இதற்காக, 750 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இதில் ஒரே ஒரு ரயில் மட்டுமே இயக்கப்படுகிறது. ராமேஸ்வரம் - செங்கோட்டையில் இருந்து கோவைக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும். மதுரை - பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட வேண்டும்,'' என்றார்.
ராஜ்யசபா அ.தி.மு.க., - எம்.பி., தர்மர், 'ராமேஸ்வரத்திற்கு, வடமாநில பக்தர்கள் ஏராளமானோர் வருகின்றனர். இதனால் கூடுதல் ரயில் இயக்க வேண்டும். வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும்,'' என்றார்.

