/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சோழவந்தான் தென்கரை கண்மாயில் 'மகளிர் காடு'
/
சோழவந்தான் தென்கரை கண்மாயில் 'மகளிர் காடு'
ADDED : ஏப் 25, 2025 06:42 AM

மதுரை: மதுரை கடச்சனேந்தல் பொறியாளர் சோழன் குபேந்திரன், சோழவந்தான் தென்கரை கண்மாயில் 'மகளிர் காடு' என்ற பெயரில் 8 லட்சம் மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயித்து மார்ச் முதல் செயல்படுத்தியும் வருகிறார்.
பார்வை பவுண்டேஷன் என்ற பெயரில் இளம் மக்கள் இயக்கம் மூலம் 12 ஆண்டுகளாக மதுரையில் 1.23 லட்சம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார். அதில் 45 சதவீத மரங்கள் அரசுப்பள்ளிகளில் வளர்கின்றன. மகளிர் காடு குறித்து அவர் கூறியதாவது:
2025 மார்ச் 8 ம் தேதி முதல் 2026 மார்ச் 8 வரையான ஓராண்டுக்குள் தென்கரை கண்மாய் கரையைச் சுற்றிலும் 8 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளேன். பெண்களை கொண்டே மரக்கன்றுக்கான குழி தோண்டுதல், நடுதல், தண்ணீர் ஊற்றி பராமரித்தல் பணிகளை செய்து வருகிறேன். அதற்காகவே 'மகளிர் காடு' என பெயரிட்டேன். கரை ஓரத்தில் தற்போது 3000 கன்றுகளை நடவு செய்துள்ளேன். இவற்றுக்கு தண்ணீர் ஊற்ற அருகிலேயே போர்வெல் அமைத்து 5000 லிட்டர் கொள்ளளவுள்ள தண்ணீர்த் தொட்டி அமைப்பதற்கான வேலை நடக்கிறது.
மரக்கன்றுகள் முழுவதும் நடப்பட்டால் இன்னும் கூடுதலாக 3 போர்வெல் அமைக்க வேண்டும். நீர்வளத்துறை அதிகாரிகள் அனுமதியுடன் மரக்கன்றுகளை தொடர்ந்து நடவு செய்கிறேன். என் வருமானத்தில் 30 சதவீதத்தை மரங்களுக்காக செலவிடுகிறேன். மதுரையில் காடுகளின் பரப்பளவு குறைவாக உள்ளது. மதுரை முழுவதும் மீண்டும் பசுமை பரவச் செய்வதே என் இலக்கு.
பிறந்த நாள் உட்பட குறிப்பிட்ட நாட்களுக்கு 'பார்ட்டி' கொண்டாடும் ஒவ்வொரு முறையும் ஒன்றிரண்டு மரக்கன்றுகளை நடுவோம் என ஒவ்வொருவரும் உறுதிமொழி ஏற்றால் மதுரை, மரங்களின் காடாகும் என்றார்.

