/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திறமைகளை வளர்க்கும் கல்லுாரிகளை தேர்வு செய்யுங்கள் கல்வி ஆலோசகர் அஸ்வின் ஆலோசனை
/
திறமைகளை வளர்க்கும் கல்லுாரிகளை தேர்வு செய்யுங்கள் கல்வி ஆலோசகர் அஸ்வின் ஆலோசனை
திறமைகளை வளர்க்கும் கல்லுாரிகளை தேர்வு செய்யுங்கள் கல்வி ஆலோசகர் அஸ்வின் ஆலோசனை
திறமைகளை வளர்க்கும் கல்லுாரிகளை தேர்வு செய்யுங்கள் கல்வி ஆலோசகர் அஸ்வின் ஆலோசனை
ADDED : மார் 27, 2025 06:22 AM
மதுரை: திறமைகளை வளர்க்கும் கல்லுாரிகளை தேர்வு செய்யுங்கள். கஷ்டப்பட்டு படித்தால் தான் எதிர்காலத்தில் வெற்றியாளராக சாதிக்க முடியும் என மதுரையில் நடந்த தினமலர் நிகழ்ச்சியில் கல்வி ஆலோசகர் அஸ்வின் பேசினார்.
வழிகாட்டி நிகழ்ச்சியின் மாலை அமர்வில் கல்வி ஆலோசகர் அஸ்வின் பேசியதாவது:
ஜெ.இ.இ.,யில் வெற்றி பெற்று ஐ.ஐ.டி.,யில் சேரும் தமிழக மாணவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது. 2024 ல் ஜெ.இ.இ., தேர்வு எழுதியவர்களில் ராஜஸ்தான், தெலுங்கானா, மத்திய பிரதேசம் உட்பட 7 மாநிலங்களிலிருந்து மட்டும் 60.83 சதவீதம் மாணவர்கள் ஐ.ஐ.டி.,யில் சேர்ந்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் இருந்து 2.92 சதவீதம் மாணவர்களே சேர்க்கையாகியுள்ளனர். இதே நிலை தான் என்.ஐ.டி., சேர்க்கையிலும் காணப்படுகிறது. தமிழக மாணவர்களின் இந்நிலைக்கு காரணம், பிரச்னைகளுக்கு தீர்வு காணும் திறமைகள் தொடர்பான பாடங்களை நாம் கற்க தவறி வருகிறோம் என்பதே.
இத்தேர்வுக்கு இயற்பியல், வேதியியல், கணிதம், பயாலஜி பாடங்களிலும், பிரச்னைகளுக்கான தீர்வுகாணும் திறன், ஆப்டிடியூட் ஸ்கில்ஸ், ஆங்கில புலமை போன்றவற்றில் அதிகம் உள்வாங்கும் திறன் அவசியம். பிரச்னைக்கு விரைந்து தீர்வு அளிக்கும் திறமையும் வேண்டும். அதற்கு தாய்மொழியில் பாடங்களை படிக்க வேண்டும். இவை 6ம் வகுப்பு முதல் நாம் படித்த லாபம் நஷ்டம் உள்ளிட்ட கணக்கு பாடங்களில் காணப்படுகின்றன.
டாப் கல்லுாரிகளுக்கான கேட் நுழைவுத் தேர்வுக்கு இவ்வகை பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் திறன் அவசியம்.
இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்களுக்கான பிரத்யேக பாடத்திட்ட புத்தகங்களை தேடிச் சென்று படித்தால் ஜெ.இ.இ.,யில் சாதிக்கலாம். இதே நிலைதான் நீட் தேர்விலும் உள்ளது. பயாலஜி பாடத்தில் மனப்பாடம் செய்யும் திறன் மாணவிகளுக்கு அதிகம் உள்ளது. இதனால் நீட் தேர்வில் மாணவிகளும், ஜெ.இ.இ., தேர்வில் மாணவர்களும் அதிகம் தேர்ச்சி பெறுகின்றனர்.
எங்கு வாய்ப்பு கிடைத்தாலும் குறிப்பாக பெண்களை படிக்க அனுப்பி வையுங்கள். சில நல்ல கல்லுாரிகளில் மத்திய அரசு வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஜெ.இ.இ.,யில் குறைந்த மதிப்பெண் பெற்றாலும் அற்கேற்ப மத்திய அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களில் உள்ள படிப்புகளை தேர்வு செய்யும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக திறமைகளை வளர்க்கும் கல்லுாரிகளை தேர்வு செய்யுங்கள்.
ரூ. லட்சங்களில் வேலை உறுதி
'கடல்சார் கேட்டரிங், ஓட்டல் மேனேஜ்மென்ட்' குறித்து மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி பேராசிரியர் சுரேஷ்குமார் பேசியதாவது:
பிளஸ் 2 வுக்கு பின் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு இலக்கு இருக்கும். வித்தியாசமான படிப்பை தேர்வு செய்ய நினைத்தால் கடல்சார் கேட்டரிங் ஓட்டல் மேனேஜ்மென்ட் படிப்புகளை தேர்வு செய்யலாம்.மருத்துவம், பொறியியல் படிக்க வாய்ப்பு கிடைக்காதவர்கள் இவ்வகை படிப்புகளை தேர்வு செய்யலாம். மதுரையில் சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் இப்படிப்பு உள்ளது. 90 சதவீதம் பிராக்டிக்கல் வகை படிப்பு இது. பிளஸ் 2 வில் 60 சதவீதம் மதிப்பெண் போதும். 3 ஆண்டுகள் இப்படிப்பு படித்தவுடன் ரூ.85 ஆயிரம் வரை சம்பளத்தில் வேலை கிடைக்கும். சில மாதங்களில் ரூ.ஒன்றரை லட்சம் வரை சம்பளம் பெறலாம். உணவுத் தொழில் தொடர்பான அனைத்து துறைகளிலும் இப்படிப்புக்கான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. படிப்புகளை தேர்வு செய்வதை விட தரமான, முழு கட்டமைப்பு உள்ள கல்லுாரிகளை தேர்வு செய்யுங்கள். அந்த கல்லுாரியில் 5 ஆண்டுகளாக மாணவர்கள் பெற்ற வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள். நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ள கல்லுாரிகள் சிறப்பு.
கோடிக்கணக்கான புதிய வேலைகள்
'ரோபோட்டிக்ஸ், ஆட்டோமேஷன்' குறித்து ஸ்ரீராமகிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியர் டேவிட் ரத்தினராஜ் பேசியதாவது:
நுாறு சதவீதம் மனித முயற்சியால் செய்யப்பட்ட வேலையை, இயந்திரம் மூலம் செய்ய வேண்டிய தொழில்நுட்பம் தான் ஆட்டோமேஷன். சீனாவில் போலீஸ் துறையில் ரோபோக்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. மருத்துவத்தில் அறுவை சிகிச்சை செய்யும் வகையில் ரோபோக்கள் பயன்பாடு வளர்ந்துள்ளது. அனைத்து துறைகளிலும் ரோபோட்டிக்ஸ் பயன்பாடு அதிகரித்து வருகிறது. எந்த வேலைக்கு ரோபோவை பயன்படுத்த வேண்டுமோ அதற்கான புரோகிராம் செய்துகொள்ளும் வகையில் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. 2030க்குள் 8.5 கோடி மக்கள் வேலை இழக்க வாய்ப்புள்ளது. அதே நேரம் 9.7 கோடி பேருக்கு புதுவித வேலைகள் இந்த ஆட்டோமேஷன் மூலம் உருவாகும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மெக்கானிக்கல் இன்ஜி., எலக்ட்ரிக்கல் இன்ஜி., கம்ப்யூட்டர் சயின்ஸ், ரோபோர்ட் ஆர்க்கிடெக் படிப்பவர்கள் தான் வரப்போகும் தொழில்நுட்பங்களை கையாள முடியும். எவ்வித பாடத்திட்டங்களை படித்தாலும் ரோபோட்டிக்ஸ் படிக்கின்றனர். கட்டுமான தொழில், ஹெல்த்கேர் உள்ளிட்ட துறைகளில் ரோபோட்டிக்ஸ் பயன்பாடு அதிகரித்துள்ளது. 24 மணிநேரம் தொடர்ந்து ஆட்களே இல்லாமல் இயங்கும் தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்படுகின்றன. தற்போதுள்ள தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற பாடத்திட்டங்களை கொண்டுள்ள கல்லுாரிகளை தேர்வு செய்யுங்கள். இதுபோன்ற பாடத்திட்டங்கள் தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனங்களில் தான் அதிகம் உள்ளன. தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ள கல்லுாரிகளா என பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்.