UPDATED : அக் 22, 2026 07:11 PM
ADDED : அக் 22, 2026 07:09 PM
டிச.4ல் மம்முட்டியின் ‘படயாத்ரா’ ரிலீஸ்
மலையாளத்தில் அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் மம்முட்டி தற்போது நடித்து வரும் படம் ‘படயாத்ரா’. இப்படம் டிச.4ல் ரிலீசாவதாக அறிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 32 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் இருவரும் இணையும் இப்படத்தை மம்முட்டியே தயாரித்துள்ளார். முன்னதாக இவர்கள் கூட்டணியில் வெளிவந்த ‘மதிலுகள், விதேயன்’ படங்கள் மூலம் சிறந்த நடிகருக்கான 2 தேசிய விருதுகளை வென்றிருந்தார் மம்முட்டி.
பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்
பின்னணி பாடகர் கிருஷ்ணராஜ் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று காலமானார். தேவா இசையில் அறிமுகமாகி அவரின் பேவரைட் பாடகராகவும் திகழ்ந்தார். ‘பொற்காலம்’ படத்தில் இடம்பெற்ற ‘தஞ்சாவூர் மண்ணு எடுத்து’ பாடலை பாடியதன் மூலம் பிரபலமானார். 300க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். ‘சூரரைப்போற்று’ படத்தில் இடம்பெற்ற ‘நாலு நிமிஷம்’ பாடல் தான் இவரின் கடைசி பாடல்.
ஒரே வாரத்தில் 549 கோடி வசூல்
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘ஜெயிலர் 2’ படம் கடந்த வாரம் ரிலீசாகி வரவேற்பை பெற்றது. ஒரே வாரத்தில் இப்படம் உலகளவில் ரூ.549 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். முதல் வாரத்தில் அதிகம் வசூலித்த தமிழ் படம் என்ற சாதனையை இப்படம் படைத்துள்ளது.
சீதையாக நடித்த அனுபவம்: சாய்பல்லவி உருக்கம்
‘ராமாயணா’ படத்தில் சீதையாக நடித்த சாய் பல்லவி, அந்த அனுபவம் பற்றி பேசுகையில், ‘‘ராமாயணாவில் சீதை போன்ற ஒரு தெய்வீகக் கதாபாத்திரத்தில் நடிப்பது அவ்வளவு எளிதல்ல. கடவுளாக நடிக்க வேண்டும் என்றால் அதற்கு பெரும் கண்டிப்புடன், நம் மனதையும் ஆன்மாவையும் முழுமையாக ஒப்படைத்தால் மட்டுமே சிறந்த நடிப்பு வெளிப்படும். தினமும் படப்பிடிப்பு தளத்தில் தியானம் செய்தேன். ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பாக நடிக்க சீதா தேவி வழிகாட்ட வேண்டும் என்று பிரார்த்தனை செய்துகொண்டேன்’’ என்றார்.
சசிகுமார் படத்தில் 3 ஹீரோயின்கள்
கன்னட இயக்குனர் ஹரி சந்தோஷ் இயக்கும் புதிய படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் சுவாசிகா, நந்திதா ஸ்வேதா, அஞ்சலி நாயர் என மூன்று நாயகிகள் நடிக்கிறார்கள். நரேன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். படம் பற்றி இயக்குனர் கூறுகையில், ‘‘இது ஒரு புதுமையான பேமிலி திரில்லர் வகை படம். தமிழில் எனது முதல் படம் என்பதால் மகிழ்ச்சி’’ என்றார்.
ஒன்றரை மாதத்திற்கு பின் தமிழில் பார்வதி படம்
மலையாளத்தில் செப்.,11ல் பார்வதி நடித்த 'பிரதம திருஷ்த்ய குற்றக்கார்' என்ற படம் ரிலீசானது. முதல் முறையாக அவர் போலீஸ் அதிகாரியாக நடித்த இப்படம் வரவேற்பை பெற்றது. இப்படம் ஓடிடியிலும் அக்.9ல் வெளியானது. இந்த நிலையில் சுமார் ஒன்றரை மாதத்திற்கு பிறகு தமிழில் டப்பிங் செய்து ‘பி.டி.கே’ என்ற பெயரில் இன்று ரிலீஸ் செய்கின்றனர்.
