'மதராஸி' கம்பேக் படமாக இருக்கும் : முருகதாஸ்
ஏஆர் முருகதாஸ் கடைசியாக இயக்கிய 'தர்பார், சிக்கந்தர்' படங்கள் வரவேற்பை பெறவில்லை. தற்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'மதராஸி' படத்தை இயக்கி உள்ளார். செப்., 5ல் ரிலீஸாகிறது. முருகதாஸ் கூறுகையில், ''மதராஸி படம் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை தரக் கூடியதாக இருக்கும். நிச்சயம் எனக்கு ஒரு கம்பேக் படமாக இருக்கும். தமிழர்களை, வட இந்தியர்கள் மதராஸி என்றுதான் சொல்கிறார்கள். இதனால் ஏற்படும் சில பிரச்னைகளை மையமாகக் கொண்டுதான் இந்தபடம் ஆக் ஷன் கதையில் உருவாகி உள்ளது'' என்கிறார்.
'கிங்டம்' படத்தில் இலங்கை கதை
கவுதம் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துள்ள படம் 'கிங்டம்'. தெலுங்கில் உருவாகி தமிழ், ஹிந்தியிலும் வெளியாகிறது. இலங்கையின் இயற்கை வளத்தை அபகரிக்க அங்குள்ள மலைவாழ் மக்களை ஒரு சர்வதேச பயங்கரவாத கும்பல் அட்டகாசம் செய்வதும், அதை தடுத்து நிறுத்த இந்தியாவில் இருந்து ஏஜெண்டாக விஜய் தேவரகொண்டா அனுப்பப்படுவதும் தான் படத்தின் கதை. இதன் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஜூலை 31ல் படம் ரிலீஸாகிறது.
கோயிலில் தீ மிதித்த புகழ்
நடிகரும், டிவி பிரபலமுமான புகழின் சொந்த ஊர் கடலூர். அங்குள்ள அம்மன் கோயிலில் நடந்த ஆடி மாதத் திரு விழாவில் பங்கேற்று தீ மிதித்துள்ளார். இது தொடர்பான வீடியோவை வெளியிட்டு, “ஆண்டவா எல்லாரும் எப்பவும் மன நிம்மதியோட, எந்த தொந்தரவும் இல்லாம சந்தோஷமா இருக்கனும்” என குறிப்பிட்டுள்ளார். இவர் நடித்துள்ள 'மிஸ்டர் ஜூ கீப்பர்' படம் ஆக., 1ல் ரிலீஸாகிறது.
ஹரிஹர வீரமல்லு : காட்சிகள் குறைப்பு
ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் பவன் கல்யாண் கடந்தவாரம் வெளியான பான் இந்தியா படம் 'ஹரிஹர வீரமல்லு'. கலவையான விமர்சனங்களை பெற்ற இப் படம் 4 நாளில் ரூ.100 கோடி வசூலை நெருங்கி உள்ளது. இதனிடையே படத்தின் நீளம் ரெண்டே முக்கால் மணிநேரம் இருந்தது. தற்போது அதில்15 முதல் 20 நிமிடம் வரை குறைத்துள்ளனராம்.
ஹீரோவை விட வில்லனுக்கு அதிக சம்பளம்
ஹிந்தியில் ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ள 'வார் 2' படத்தில் வில்லனாக நடித்து பாலிவுட்டில் அறிமுகமாகிறார் தெலுங்கு நடிகர் ஜுனியர் என்டிஆர். இந்த படத்தில் நாயகன் ஹிருத்திக்கிற்கு 50 கோடி தான் சம்பளமாம். ஆனால் ஜுனியர் என்டிஆருக்கு 60 கோடி சம்பளமாம். ஆக் ஷன் கலந்த ஸ்பை திரில்லராக உருவாகி உள்ள இந்த படம் ஆக., 14ல் பான் இந்தியா படமாக வெளியாகிறது.
7 ஆண்டுகளுக்கு பின் வெளியாகும் 'அடங்காதே'
சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார், சரத்குமார், சுரபி, மந்த்ரா பேடி உள்ளிட்டோர் நடிப்பில் 2018ல் தயாரான படம் 'அடங்காதே'. சென்சார் உள்ளிட்ட பல பிரச்னைகளால் இதன் வெளியீடு 7 ஆண்டுகளாக தள்ளிப்போன நிலையில் இப்போது ஆக., 27ல் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.