/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உறுப்பு தான விழிப்புணர்வு அதிகரிப்பு ; ஒருவர் மூலம் 7 பேருக்கு மறுவாழ்வு
/
உறுப்பு தான விழிப்புணர்வு அதிகரிப்பு ; ஒருவர் மூலம் 7 பேருக்கு மறுவாழ்வு
உறுப்பு தான விழிப்புணர்வு அதிகரிப்பு ; ஒருவர் மூலம் 7 பேருக்கு மறுவாழ்வு
உறுப்பு தான விழிப்புணர்வு அதிகரிப்பு ; ஒருவர் மூலம் 7 பேருக்கு மறுவாழ்வு
ADDED : பிப் 01, 2024 04:01 AM
மதுரை மூளைச்சாவு நோயாளிகளின் உடலில் இருந்து உறுப்புகள் எடுக்கப்பட்டு நோயாளிகளுக்கு பொருத்தப்படும் நடைமுறைக்கான விழிப்புணர்வு மதுரையில் அதிகரித்து வருகிறது.
மதுரை அரசு மருத்துவமனையில் கடந்தாண்டு ஆறு மூளைச்சாவு நோயாளிகளின் உடலில் இருந்து உறுப்புகள் எடுக்கப்பட்டு பிற நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன. இந்த ஆண்டு ஜனவரியில் மட்டும் 4 பேரிடமிருந்து உறுப்புகள் பெறப்பட்டுள்ளன. 2023ல் 15 பேரிடம் இருந்து சிறுநீரக தானம் பெறப்பட்டது. இங்கு இறந்த 6 மூளைச்சாவு நோயாளியிடமும் பிற மருத்துவமனை நோயாளிகளிடம் இருந்தும் 19 சிறுநீரகங்கள், இந்த ஜனவரியில் 4 நோயாளிடமிருந்து சிறுநீரகங்கள் பெறப்பட்டன.
கடந்தாண்டு 44 நோயாளிகளுக்கு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. இரண்டு மூளைச்சாவு நோயாளிடமிருந்து எலும்பு தானம், 4 நோயாளிகளின் தோல் தானமாக பெறப்பட்டன. கடந்தாண்டு 385 கருவிழிகளும் இந்த ஜனவரியில் 42 கருவிழிகளும் தானமாக பெறப்பட்டன.
வீட்டில் அல்லது மருத்துவமனையில் இறப்பவர்களின் கண்களை தாராளமாக தானம் செய்யலாம். இறப்பு நிகழ்ந்து 4 மணி நேரத்திற்குள் தகவல் தெரிவித்தால் மதுரை அரசு மருத்துவமனை குழுவினர் நேரில் வந்து பெற்றுக்கொள்வர். சமீப காலமாக புற்றுநோய் மற்றும் எலும்பு முறிவு விபத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு எலும்பு மாற்று அதிகம் தேவைப்படுகிறது. மூளைச்சாவு நோயாளிகளின் கண்கள், இதயம், கல்லீரல், சிறுநீரகம் தானமாக பெறப்படும் போது எலும்பு தானம் தர சிலர் தயங்குகின்றனர். எலும்பு மட்டுமின்றி எலும்புக்கும் தசைக்கும் இடையில் உள்ள தசை நார்களும் நோயாளிகளின் அவசர சிகிச்சைக்கு தேவைப்படுகிறது. எனவே எலும்பு தானம் தர முடியாத நிலையில் தசைநார்களை தானமாக தந்தால் உதவியாக இருக்கும். இது குறித்து மூளைச் சாவு அடையும் நோயாளிகளின் உறவினர்களிடம் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்கின்றனர் டாக்டர்கள்.