/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் விபத்துகளை தடுப்பது எப்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
/
மதுரையில் விபத்துகளை தடுப்பது எப்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
மதுரையில் விபத்துகளை தடுப்பது எப்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
மதுரையில் விபத்துகளை தடுப்பது எப்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
ADDED : நவ 26, 2025 05:08 AM
மதுரை: மதுரையில் சாலைப் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் நடந்தது.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் சந்திரசேகரன், போலீஸ், வருவாய், நெடுஞ்சாலை, போக்குவரத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் சாலை விபத்துகள், அதற்கான வாய்ப்புகள், அவற்றை நிவர்த்தி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கலெக்டர் பேசுகையில், 'புதிய நிழற்குடை அமைக்கும்போது பஸ்கள் அந்த இடத்தில் நின்று செல்கிறதா என அதிகாரிகள் உத்தரவிடுவதோடு கேமரா பொருத்தி கண்காணிக்கலாம்' என்றார்.
தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்க கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம் பேசுகையில், 'குடிநீர் குழாய் வெடிப்பால் நீர்கசிந்து, ரோடு அரித்து பள்ளமாகிறது. இதனாலும் வாகன விபத்து நடக்கிறது. பழங்காநத்தம் - திருநகர் ரோடு அகலப்படுத்திய பின், மீடியன்களின் இடைவெளியில் தடுப்புகளை அருகில் வைக்காமல் நுாறு அடி தள்ளி வைப்பதாலும் விபத்து நடக்கிறது' என்றார். பரிசீலிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
விரகனுார் ரிங்ரோடு கல்லம்பல் பகுதியில் தெருவிளக்கு, ஹைமாஸ் விளக்கு வேண்டும். அங்குள்ள பாலத்தின் வளைவில் வாகன ஓட்டிகள் விபத்தை சந்தித்தால் சேதத்தை குறைக்கும் வகையில் உலோக தடுப்பை பொருத்த வேண்டும் என போலீஸ் அதிகாரி ஒருவர் யோசனை தெரிவித்தார். பழங்காநத்தம் பைபாஸ் ரோடு பாலத்தில் பிரதிபலிப்பான்கள் பொருத்த வேண்டும். இதற்காக பிரதிபலிப்பான்கள் ஆறுமாதங்களுக்கு முன்பே வாங்கிக் கொடுத்துள்ளோம். அதை இதுவரை பொருத்தவில்லை என்று தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் தெரிவித்தனர். கலெக்டர் கூறுகையில், 'பத்து நாட்களில் அதனை பொருத்த வேண்டும்' என்றார்.
போலீஸ் அதிகாரி ஒருவர் பேசுகையில், ''திருப்பரங்குன்றம் ரோட்டில் பசுமலை, தேனி ரோட்டில் முடக்குசாலை பாலம் பகுதியிலும் பிரதிபலிப்பான்கள் இல்லை.
உயர்மின் கோபுர விளக்கும் அமைக்க வேண்டும்'' என்றார். கலெக்டர், 'பத்து நாட்களில் பிரதிபலிப்பான்களை பொருத்த வேண்டும். உயர்கோபுர மின்விளக்கு அமைக்க எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் பெற இயலுமா என பார்ப்போம்' எனக்கூறினார்.

