/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
63 பேருக்கு செயற்கை கால்கள் கலெக்டர் வழங்கினார்
/
63 பேருக்கு செயற்கை கால்கள் கலெக்டர் வழங்கினார்
ADDED : ஆக 26, 2025 04:04 AM
மதுரை: மதுரை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் அன்பழகன், நேர்முக உதவியாளர் சந்திரசேகரன் பங்கேற்றனர். மாற்றுத் திறனாளிகளிடம் மனுக்களைப் பெற்று கலெக்டர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
நரம்பியல் பாதிப்பு, ஆட்டிசம் போன்றவற்றால் நடக்க இயலாத மாணவர்கள் 61 பேருக்கு காலிப்பர்கள், விபத்தில் கால் பாதிக்கப்பட்ட 2 பேருக்கு செயற்கை கால்கள் என மொத்தம் ரூ.2.75 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் சுவாமிநாதன், தொழில் வழிகாட்டி வெங்கடசுப்ரமணியன், முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, டி.இ.ஓ.,க்கள் சிவகுமார், கணேசன், அனைவருக்கும் கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர் சூரியகலா, உதவி திட்ட அலுவலர் சரவணமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கண்ணனேந்தல் மாணவி தரண்யா கல்வி கடன் கேட்டு மனுகொடுத்தார். அவர் கூறியதாவது: பிளஸ் 2ல் 470 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். நீட் தேர்வில் 374 மதிப்பெண்கள் பெற்றேன். எனக்கு தனியார் கல்லுாரியில்தான் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும். வாடகை வீட்டில் வசிக்கிறோம். டிரைவரான தந்தை இதயநோய் பாதிப்பில் உள்ளார். தாய் கூலிவேலை செய்கிறார். கல்லுாரியில் சேர வங்கிக் கடன் உதவி கேட்டு மனு கொடுத்தேன். ஏற்பாடு செய்வதாக கலெக்டர் தெரிவித்தார் என்றார்.