ADDED : மே 26, 2025 02:23 AM

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் ஒன்றியம் முடுவார்பட்டியில் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களால் பஸ்ஸ்டாப் வசதியின்றி பயணிகள் சிரமப்படுகின்றனர்.
இந்த ஊராட்சியில் வி.ஏ.ஓ., ஆர்.ஐ., அலுவலகம் துவங்கி வெள்ளையம்பட்டி ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்புக் கடைகள், கட்சிக் கொடிகள் உள்ளன. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளி அருகே 30 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட ஓட்டுக் கட்டட பஸ் ஸ்டாப் சில ஆண்டுகளுக்கு முன் சேதமடைந்தது.
தொடர்ந்து சேதமடைந்த பஸ் ஸ்டாப் இருந்த இடத்தில் அடுத்தடுத்து அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் சிமென்ட் கட்டுமானங்களுடன் ஆக்கிரமித்துள்ளன. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயில், மழைக்கு ரோட்டோர கடை வாசல்களில் காத்திருந்து சிரமப்படுகின்றனர்.
ஊராட்சி நிர்வாகம் மீண்டும் பஸ்ஸ்டாப் கட்டுவதற்காக அதே இடத்தை 2 முறை அளவீடு செய்தது. ஆயினும் ஆக்கிரமிப்பை அகற்றி பஸ் ஸ்டாப் பணியை துவக்கவில்லை. நீதிமன்ற உத்தரவுப்படி பொது இடங்களில் கட்சிக் கொடிகளை அகற்ற வேண்டும்.
ஊராட்சி, வருவாய் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றி பஸ்ஸ்டாப் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.