/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை மாநகராட்சி வார்டுகளில் அடங்கவில்லை 'அடைப்பு' புகார்கள் ; உபகரணங்கள், ஆட்கள் வசதி அதிகப்படுத்தப்படுமா
/
மதுரை மாநகராட்சி வார்டுகளில் அடங்கவில்லை 'அடைப்பு' புகார்கள் ; உபகரணங்கள், ஆட்கள் வசதி அதிகப்படுத்தப்படுமா
மதுரை மாநகராட்சி வார்டுகளில் அடங்கவில்லை 'அடைப்பு' புகார்கள் ; உபகரணங்கள், ஆட்கள் வசதி அதிகப்படுத்தப்படுமா
மதுரை மாநகராட்சி வார்டுகளில் அடங்கவில்லை 'அடைப்பு' புகார்கள் ; உபகரணங்கள், ஆட்கள் வசதி அதிகப்படுத்தப்படுமா
ADDED : அக் 06, 2025 03:59 AM

மதுரை : 'மதுரை மாநகராட்சியில் பாதாளச் சாக்கடை, கழிவு நீர் தொட்டிகளில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்ய போதிய உபகரணங்கள், பணியாளர்கள் இல்லாததால் அதுதொடர்பான புகார்கள் அதிகரிப்பதை தடுக்க முடியவில்லை' என அதிகாரிகள் புலம்புகின்றனர்.
மதுரை நகரில் லேசான மழை பெய்தாலே ரோடுகளில் தண்ணீர் தேங்கி விடுகிறது. உடனேயே குடிநீரில் கழிவு நீர் கலக்கும் பிரச்னையும் தலைதுாக்குகிறது. தேங்கும் தண்ணீரால் ரோடுகள் சேதமடைகின்றன. வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதுபோன்ற பிரச்னைகளுக்கு காரணமே பழைய பாதாளச் சாக்கடை கட்டமைப்பு வசதிகளை இன்னும் மேம்படுத்த முடியவில்லை என்பதே.
மாநகராட்சியில் பழைய 72 வார்டுகளில் தான் பாதாளச் சாக்கடை வசதி கட்டமைப்பு உள்ளது. இக்குழாய்கள் பெரும்பாலும் பழமையானதாக மாறிவிட்டன. தற்போது விரிவாக்க வார்டுகளில் பாதாளச் சாக்கடை வசதி செய்யப்பட்டு வந்தாலும், கழிவு நீர்த் தொட்டிகள் கட்டமைப்பு இன்னும் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை.
மாநகராட்சி புகார் எண்ணுக்கு தினந்தோறும் பாதாளச் சாக்கடை அடைப்பு, ரோடுகளில் தேங்கி ஓடுவது, குடிநீரில் கழிவுநீர் கலப்பு தொடர்பாகவே அதிக புகார்கள் வருகின்றன. உபகரணங்கள், பணியாளர் எண்ணிக்கை இல்லாததால் பிரச்னைகளை சமாளிப்பதில் மாநகராட்சி பணியாளர்கள் திணறுகின்றனர். புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நெருக்கடியால் மனஉளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.
மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது: கழிவு நீர் வாய்க்கால்களில் அடைப்பு, கழிவுநீர் தொட்டிகளில் தேங்குதல், குழாய்களுக்குள் மண் அடைப்பு காரணங்களால் தான் பாதாளச் சாக்கடை அடைப்பு பிரச்னை ஏற்படுகிறது. வாய்க்கால்களில் தேங்கிய கழிவுநீரை உறிஞ்ச 'சக்கிங் லாரி', கழிவுநீர் தொட்டிகளில் தேங்கிய மண்ணை அகற்ற 'டீசில்ட்டிங் ஆட்டோ', பாதளச் சாக்கடையில் அடைப்புகளை வெளியேற்ற 'ஜெட் லாரி' போன்ற உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இவற்றின் விலை அதிகம் என்பதால் மண்டலத்திற்கு ஒன்று என்ற வீதத்தில் இந்த வாகன வசதி உள்ளது. குறைந்தது மண்டலத்திற்கு 4 வண்டிகள் தேவையாக உள்ளன. மூவாயிரத்திற்கும் மேல் உள்ள கழிவுநீர்த் தொட்டிகளில் மண் அடைப்பை அகற்றவும் போதிய வாகனங்கள் இல்லை. பெரிய அளவில் பாதாளச் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டால் மண்ணை உறிஞ்சி எடுக்கும் 'சூப்பர் சக்கர் லாரி' ஒன்று, கோவையில் இருந்து கொண்டுவரப்பட்டு நாள் வாடகை அடிப்படையில் பயன்படுத்தப்படுகிறது. இதை மதுரை மாநகராட்சியே கொள்முதல் செய்ய ஒவ்வொரு கூட்டத்திலும் கவுன்சிலர்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும் வார்டுகளில் பாதாளச் சாக்கடை பராமரிப்பு, குடிநீர் வினியோக பராமரிப்புக்கான தேர்ச்சித் திறன் பணியாளர் எண்ணிக்கை குறைவாக உள்ளது. ஒவ்வொரு வார்டிலும் மேலும் தலா 4 பேரை நியமிக்க வேண்டும். 150 க்கும் மேல் பணியாளர்கள் ஓய்வு பெற்ற நிலையில் புதியவர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர்.
ஒரு வார்டில் குறைந்தது தினம் 10 புகார்களாவது எழுகின்றன. உபகரணங்கள், ஆட்கள் பற்றாக்குறையால் புகார் மீதான நடவடிக்கை சவாலாக உள்ளது. சில வார்டுகளில் மீண்டும் மீண்டும் ஒரே புகார் தெரிவிக்கப்படுகிறது. மழைக்காலம் வந்துவிட்டதால் உபகரணங்கள் வசதி, ஆட்கள் எண்ணிக்கையை மாநகராட்சி அதிகரிக்க வேண்டும் என்றனர்.