/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குப்பை கூளமாக மாறிய பறிமுதல் வாகனங்கள்
/
குப்பை கூளமாக மாறிய பறிமுதல் வாகனங்கள்
ADDED : ஆக 23, 2025 04:41 AM

மதுரை : மதுரை விஸ்வநாதபுரம் பகுதியில் போலீசார் பறிமுதல் செய்த வாகனங்களைரோட்டோரம் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகின்றனர். அவற்றை அப்புறப்படுத்த வேண்டுகோள் விடுத்தனர்.
மாநகராட்சி 15வது வார்டு விஸ்வநாதபுரம் பழைய விஜயலட்சுமி தியேட்டர் ரோட்டோரம் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்த 40க்கும் மேற்பட்ட கார்கள், டூவீலர்களை நிறுத்தி வைத்துள்ளனர்.
பல ஆண்டுகளாக அங்கிருப்பதால், பயன்படுத்த முடியாத அளவு சேதமடைந்து, விஷ ஜந்துகளின் கூடாரமாக மாறியுள்ளது. மேலும் அப்பகுதியினர் குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்துகின்றனர். மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை பேனர் வைத்தும் பலனில்லை.
இரவில் சமூக விரோதிகள் மது அருந்துவது, சிறுநீர் கழிப்பது என செயல்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. பெண்கள், குழந்தைகள் தனியாக நடந்து செல்ல முடியவில்லை. அருகேயுள்ள பள்ளி, முதியோர் இல்லத்தில் வசிப்போருக்கு நோய் அபாயம் உள்ளது.
அப்பகுதி ஜெயராமன் கூறியதாவது: ஏழு ஆண்டுகளாக வாகனங்களை இங்கு குவிக்கின்றனர். தெருவிளக்கு எரியாததால் இருட்டை பயன்படுத்தி சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. தீ விபத்து அபாயம் உள்ளதால் முதியோர் இல்ல வாசிகளுக்கு மூச்சுத் திணறல், அசம்பாவிதம் நடக்க வாய்ப்புள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் என்றார்.