/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காங்., மேலிட பொறுப்பாளர் மாற்றத்திற்கு 'கோஷ்டி தலை'கள் கூட்டணி பின்னணியா அதிர்ச்சியில் தமிழக நிர்வாகிகள்
/
காங்., மேலிட பொறுப்பாளர் மாற்றத்திற்கு 'கோஷ்டி தலை'கள் கூட்டணி பின்னணியா அதிர்ச்சியில் தமிழக நிர்வாகிகள்
காங்., மேலிட பொறுப்பாளர் மாற்றத்திற்கு 'கோஷ்டி தலை'கள் கூட்டணி பின்னணியா அதிர்ச்சியில் தமிழக நிர்வாகிகள்
காங்., மேலிட பொறுப்பாளர் மாற்றத்திற்கு 'கோஷ்டி தலை'கள் கூட்டணி பின்னணியா அதிர்ச்சியில் தமிழக நிர்வாகிகள்
ADDED : பிப் 16, 2025 10:32 PM
மதுரை : தமிழக காங்., மேலிடத் தலைவர் அஜோய் குமார் மாற்றப்பட்டதன் பின்னணியில் மாநில தலைவர் செல்வப்பெருந்தகைக்கு எதிரான 'கோஷ்டி தலை'களின் கூட்டணியின் உள்குத்துதான் காரணம் என கட்சிக்குள் புகைச்சல் எழுந்துள்ளது.
தமிழக காங்., என்றாலே 'கோஷ்டி அரசியல்' என்பதே அடையாளம். மாநில தலைவராக பதவி வகிப்போர் தங்களுக்கான ஒரு ஆதரவு கூட்டத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் வளர்த்து விடுவதுதான் பொது 'பார்முலா'வாக உள்ளது. அந்த வகையில் செல்வப்பெருந்தகைக்கு முந்தைய தலைவர்களின் ஆதரவாளர்கள் அனைத்து மாவட்டங்களிலும் இப்போதும் அசைக்க முடியாத நிலையில் கோலோச்சுகின்றனர்.
இது, செல்வப்பெருந்தகைக்கு தற்போது வரை பெரும் சவாலாகவே உள்ளது. இதனால் மாவட்டங்களில் புதிய நிர்வாகிகள் நியமனத்தை தீவிரமாக அவர் கையில் எடுத்தார். இதன்படி மாவட்டங்களில் தலா ஒரு பொருளாளர், 4 துணைத் தலைவர்கள், 6 பொதுச் செயலாளர்கள், சர்க்கிள், வார்டு, வட்டத் தலைவர்கள் நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில் பழைய தலைவர்களின் ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
மாவட்ட தலைவர்கள் நன்றாக பணியாற்றி வரும் நிலையில், அப்பதவிகளுக்கும் மாநில தலைமை விண்ணப்பங்களை பெற்றது. மேலும் காங்., வரலாற்றிலேயே திராவிடக் கட்சிகள் போல் விண்ணப்பங்கள் பெற கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டது. இது அகில இந்திய தலைமை வரை புகாராக சென்றது.
மாவட்ட தலைவர்கள் அதிருப்தியடைந்தனர். அந்த நேரம் சென்னைக்கு வந்த மேலிட பொறுப்பாளர் அஜோய் குமாரிடம் மாவட்ட தலைவர்கள் தங்கள் குமுறலை நேரடியாக தெரிவித்தனர். அவர் அதை கண்டுகொள்ளவில்லை. அவர் செல்வப்பெருந்தகையுடன் இணக்கத்தில் இருந்தது தெரிந்தது.
இதனால் மாவட்ட தலைவர்கள், அவர்கள் சார்ந்த முன்னாள் தலைவர்களிடம் முறையிட்டனர். அவர்கள் இதை டில்லி தலைமையின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
அதேநேரம் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட அஜோய்குமார் தோல்வியை தழுவினார். அவரது தோல்வி தமிழகத்தில் எதிரொலித்தது. 'சொந்த தொகுதியில் தோல்வியடைந்தவர், தமிழகத்தில் எப்படி வெற்றி தேடி தருவார்' என விமர்சனம் எழுந்தது. இதற்கிடையே டில்லி சட்டசபை தேர்தல் முடிவுகளும் காங்கிரசை அதிர்ச்சியடைய வைத்தது.
இதையடுத்து 9 மாநிலங்களில் மேலிட பார்வையாளர்களை மாற்றும் பட்டியலில் அஜோய்குமாரும் இடம் பெற்றார். இவரது மாற்றத்தை பெரும்பாலான மாவட்ட தலைவர்கள் வரவேற்றுள்ளனர். இதனால் மாநில தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது.
இதுகுறித்து மூத்த மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது: 2026 ல் தமிழக சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில் நிர்வாகிகளிடம் பல குறைகள், எதிர்பார்ப்புகள் இருந்தன.
ஆனால் மாநில தலைமையுடன் இணைந்து செயல்பட்ட, மேலிட பொறுப்பாளரும் டில்லி தலைமைக்கு அவற்றை கொண்டு செல்லவில்லை. இதனால் சீனியர் தலைவர்களின் அதிருப்திக்கு ஆளாகினார். இதையடுத்து அவர் குறித்து டில்லி தலைமையிடம் புகார் வாசிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் அவரது தேர்தல் தோல்வி, டில்லி காங்., தோல்வி எதிரரொலியாக மாற்றப் பட்டியலில் இடம் பெற்றுவிட்டார்.
மேலும் சட்டசபை தேர்தலின்போது கூட்டணி தொடர்பாக பேச இவரை விடவும் திறமையானவர் வேண்டும் என காங்., மேலிடமும் எதிர்பார்த்தது. இச்சூழலில்தான் மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து கோவா, வடகிழக்கு மாநிலங்களுக்கான பொறுப்பாளராக இருந்து அனுபவம் பெற்ற கிரிஷ் சோதன்கர் இங்கே நியமிக்கப்பட்டுள்ளார் என்றனர்.