/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கட்டுமான பொருட்கள் விலை நிர்ணய குழு: மனு தள்ளுபடி
/
கட்டுமான பொருட்கள் விலை நிர்ணய குழு: மனு தள்ளுபடி
ADDED : மார் 26, 2025 03:45 AM
மதுரை : கட்டுமான பொருட்களின் விலையை தன்னிச்சையாக உயர்த்துவதை தடுத்து ஒழுங்குபடுத்த மாநில அளவில் குழு அமைக்க தாக்கலான வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.சிவகங்கை மாவட்டம் பெரியகிளுவச்சி கந்தசாமி தாக்கல் செய்த பொதுநல மனு:அரசின் சிவில் கட்டுமான ஒப்பந்தப் பணியை மேற்கொள்கிறேன். சிவகங்கை, புதுக்கோட்டையில் 'எம்' சாண்ட், கிராவல், கற்கள் உள்ளிட்ட பிற கட்டுமான பொருட்களின் விலை தன்னிச்சையாக உயர்த்தப்பட்டுள்ளது. காரணத்தை தெளிவுபடுத்தவில்லை.
குவாரிகளுக்கு வழங்கிய ஒப்பந்த விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன.
பல்வேறு கட்டுமான ஒப்பந்த பணியை செயல்படுத்துவதில் ஒப்பந்ததாரர்கள் சிரமத்தை சந்திக்கின்றனர்.அரசு மற்றும் இதர திட்டப் பணியை மேற்கொள்ள குவாரி பொருட்கள், இரும்பு உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலையை தன்னிச்சையாக உயர்த்துவதை தடுத்து ஒழுங்குபடுத்த மாநில அளவில் குழு அமைக்க வலியுறுத்தி தமிழக கனிமவளத்துறை முதன்மைச் செயலருக்கு மனு அனுப்பினேன்.
நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது.
அரசு தரப்பு: கட்டுமான பொருட்களின் விலையை கட்டுமான பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர் சங்கம் நிர்ணயிக்கிறது. விலை நிர்ணயத்திற்கும் அரசிற்கும் தொடர்பில்லை.
இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள்: மனுதாரர் தனிப்பட்ட ஒப்பந்ததாரர் என்ற முறையில் மனு தாக்கல் செய்வது ஏற்புடையதல்ல. ஒப்பந்ததாரர் சங்கம் சார்பில் மனு செய்யலாம். இம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டனர்.