/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நெடுஞ்சாலை கோட்டப்பொறியாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
/
நெடுஞ்சாலை கோட்டப்பொறியாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
நெடுஞ்சாலை கோட்டப்பொறியாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
நெடுஞ்சாலை கோட்டப்பொறியாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
ADDED : நவ 20, 2024 06:53 AM
மதுரை : மதுரை- திண்டுக்கல் ரோடு சமயநல்லுார் பகுதியில் விபத்துக்களை தடுக்க தாக்கலான வழக்கில் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் ஆஜராகாததால் அவருக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்து நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
பரவை செந்தில்குமார்,'திண்டுக்கல் ரோடு சமயநல்லுார் பகுதியில் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க நெடுஞ்சாலைத்துறை, மதுரை எஸ்.பி.,க்கு உத்தரவிட வேண்டும்,' என மனு செய்தார்.
ஏற்கனவே விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு: சமயநல்லுார் போலீசில் 2017-21 ல் 293 விபத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 67 பேர் இறந்துள்ளனர்; 211 பேர் காயமடைந்தனர். இது ஆபத்தான நிலை மற்றும் மதுரை- - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் பாத்திமா கல்லுாரி- சமயநல்லுார் இடையே பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டியதை காட்டுகிறது.
மதுரை நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் (கட்டுமானம், பராமரிப்பு-2) ஆவணங்களுடன் ஆஜராக வேண்டும். சமயநல்லுார் போலீஸ் எல்லைக்குள் 2018 முதல் 2024 அக்டோபர்வரை நடந்த விபத்துகள் எண்ணிக்கை குறித்த அறிக்கையை டி.எஸ்.பி.,நவ.19 ல் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு நேற்று விசாரித்தது.
டி.எஸ்.பி.,ஆனந்த்ராஜ் ஆஜராகி,'2018 முதல் 2024 அக்டோபர்வரை பரவை சோதனைச் சாவடியிலிருந்து சமயநல்லுார் நான்குவழிச்சாலை பகுதிவரை 143 விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் 33 பேர் இறந்துள்ளனர். பாத்திமா கல்லுாரி முதல் பரவை சோதனைச் சாவடிவரையிலான பகுதி நகர் போலீசாரின் அதிகார எல்லைக்குள் வருகிறது,' என அறிக்கை சமர்ப்பித்தார்.அரசு தரப்பு வழக்கறிஞர்: மதுரை நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் ஒரு கூட்டத்தில் பங்கேற்றதால் ஆஜராக முடியவில்லை.
இவ்வாறு தெரிவித்தார்.
நீதிபதிகள்: நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் ஆஜராகாததால் அவர் மீது இந்நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்கிறது. அவர் விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. மதுரை போக்குவரத்து காவல்துறை துணைக் கமிஷனரை இந்நீதிமன்றம் தானாக முன்வந்து எதிர்மனுதாரராக இணைத்துக் கொள்கிறது. அவர் விபத்துக்களை குறைக்க மேற்கொண்ட நடவடிக்கை குறித்து நாளை (நவ.,21) அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.