/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆசிரியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட தீபாவளி முன்பணம் கிடைக்குமா இதுவரை நிதி ஒதுக்கவில்லை என சர்ச்சை
/
ஆசிரியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட தீபாவளி முன்பணம் கிடைக்குமா இதுவரை நிதி ஒதுக்கவில்லை என சர்ச்சை
ஆசிரியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட தீபாவளி முன்பணம் கிடைக்குமா இதுவரை நிதி ஒதுக்கவில்லை என சர்ச்சை
ஆசிரியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட தீபாவளி முன்பணம் கிடைக்குமா இதுவரை நிதி ஒதுக்கவில்லை என சர்ச்சை
ADDED : செப் 22, 2025 03:17 AM
மதுரை : இதுவரை கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.20 ஆயிரம் பண்டிகை முன்பணம் இந்தாண்டு தீபாவளிக்கு கிடைக்குமா என ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
பட்ஜெட் கூட்டத் தொடரில் அரசு ஊழியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார். இதில் முக்கியமானதாக அரசு ஊழியர்களுக்கான பண்டிகை முன்பணம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாகவும், அரசு ஊழியர்கள், அவர்களின் மகன், மகளுக்கான திருமணம் முன்பணம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.5 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது. ஜூனில் இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.
இதையடுத்து அனைத்து ஆசிரியர்களும் போட்டி போட்டுக்கொண்டு தீபாவளி முன்தொகை பெற கல்வித்துறையின் களஞ்சியம் செயலியில் விண்ணப்பித்தனர். முன்பணத்தை அக்டோபர் முதல் வாரம் கொடுத்தால் தான் தீபாவளியை கொண்டாட முடியும். அதற்கான கூடுதல் நிதி ஒதுக்கீட்டை அரசு மேற்கொண்டிருக்க வேண்டும். நேற்றுவரை அரசு பள்ளிகளுக்கான கணக்கு எண்களுக்கு (அக்கவுண்ட் ஹெட்) ஒதுக்கீடு கிடைக்கவில்லை. இதனால் பழைய முன்தொகை அல்லது தற்போது விண்ணப்பித்தவர்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே முன்பணம் பெற முடியும் சூழல் உள்ளது. தலைமையாசிரியர்கள் கூறியதாவது: அரசு பள்ளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலையில் தேவையான நிதி ஒதுக்கீடு அந்தந்த பள்ளி கணக்கு தலைப்புக்கு வந்து விடும். இந்தாண்டும் பண்டிகை முன்பணம் பழைய தொகையான ரூ.10 ஆயிரம் என்ற அடிப்படையில் தான் பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.20 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டதற்கான கூடுதல் தொகையை அரசு வழங்கும் என்ற அறிகுறியே இல்லை. இந்த வாரம் ஒதுக்கீடு செய்தால் தான் அக்டோபர் முதல் வாரம் முன்பணம் வழங்க முடியும். அதிகரிக்கப்பட்ட கூடுதல் தொகையை ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்.,ல் குறிப்பிட்டு பதிவேற்றம் செய்வதற்கான வசதியும் 'அப்டேட்' செய்யவில்லை.
கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யாவிட்டாலும் விண்ணப்பித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் அதிகரிக்கப்பட்ட முன்பணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.