UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 07:56 PM
மதுரை: துறை சார்ந்த குறைகளைச் சொல்ல வரும் ஊழியர்களை அலுவலகத்தில் சந்திக்க மறுக்கும் இணைப்பதிவாளர் (பொறுப்பு) ஹேமா சலோனியை மாற்றக் கோரி, கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் அலுவலகம் முன் ஊழியர்கள் நேற்று மாலை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் நவநீதகிருஷ்ணன், துணைத்தலைவர் சந்திரபோஸ், மாவட்ட தலைவர் தமிழ், அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் நீதிராஜா கூறியதாவது: அலுவலக கோப்புகளில் இணைப்பதிவாளர் உரிய நேரங்களில் கையெழுத்து இடாமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறார். அரசு ஊழியர்கள் விருப்பப்பட்டால் எந்த மாதத்திலும் இடமாறுதல் கொடுப்பதற்கு அரசாணை 10ல் வழியிருந்தும் அலுவலக காலிப்பணியிடத்திற்கு வர விரும்பும் ஊழியர்களுக்கு இடமாறுதல் தராமல் தாமதப்படுத்துகிறார்.
இடமாறுதல் உட்பட அலுவல் சார்ந்த பிரச்னைகள், குறைகளை சொல்வதற்கு இணைப்பதிவாளர் அலுவலகத்திற்கு வரும் ஊழியர்களை மணிக்கணக்கில் காத்திருக்க வைத்து திருப்பி அனுப்புகிறார். இவரை கூடுதல் பொறுப்பில் இருந்து விடுவித்து நிரந்தர இணைப்பதிவாளரை நியமிக்க வேண்டும் என்றனர்.
