/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எலிகளை ‛'அட்டாக்' செய்யும் உளுந்து பயிர்கள்
/
எலிகளை ‛'அட்டாக்' செய்யும் உளுந்து பயிர்கள்
ADDED : ஜன 08, 2025 05:11 AM

நெல் வயலில் எலிகள் தொல்லையும் பூச்சிகள் தொல்லையும் அதிகமாக இருக்கும். இரண்டையும் ஒருசேர தடுக்க வேண்டுமெனில் நெல் வயலின் வரப்போரம் உளுந்து பயிர்களை விதைக்கலாம் என்கிறார் திண்டுக்கல் ரெட்டியார்சத்திரத்தைச் சேர்ந்த விவசாயி கருதியப்பன்.
விவசாய அணுகுமுறை குறித்து கருதியப்பன் கூறியதாவது:
நடவு வயலில் வயல் மட்டத்திலிருந்து வரப்பின் ஓரத்தில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு உயரத்தில் உளுந்து பயறு விதைக்க வேண்டும். இப்பயிரில் நெற்பயிரைத் தாக்காத அசுவினி பூச்சிகள் உற்பத்தியாகும். இவற்றைப் பிடித்து உண்ணும் ஏராளமான பொறிவண்டுகள் இவற்றால் கவரப்படும். அசுவினி போன்ற பூச்சிகள் வரப்பு பயிரில் உளுந்து பயிரை விரும்பி சாப்பிடுவதால் நெற்பயிரில் பூச்சி தாக்காத வண்ணம் பாதிக்கப்படுகிறது. இப்பொறிவண்டுகள் நெற்பயிருக்கு நன்மை செய்யும் பூச்சியினங்கள். மேலும் இவை நெற்பயிரைத் தாக்கும் பலவித சாறு உறிஞ்சும் பூச்சிகளைத் தாக்கி அவற்றை உண்டு பூச்சிகளின் தாக்குதலில் இருந்து கட்டுப்படுத்தும்.
வரப்பில் உளுந்து விதைப்பதால் வரப்பு சுத்தமாகும், களைகளின்றி பாதுகாக்கப்படுவதால் களைகள் மூலம் பரவும் நோய்கள் கட்டுப்படும். ஏக்கருக்கு 2 கிலோ உளுந்து விதை போதும். வரப்பின் ஓரத்தில் 30 செ.மீ., இடைவெளியில் உளுந்தை விதைக்க வேண்டும். இதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானமும் கிடைக்கும். நெல் வரப்பில் உளுந்து சாகுபடி செய்தால் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். வரப்பு பயிர் என்பது முதன்மை பயிருக்கு பாதுகாப்பு அரணாக செயல்படுகிறது.
வரப்பு பயிரில் உளுந்து சாகுபடி செய்வதால் கூடுதல் வருமானம் மற்றும் பூச்சி மருந்து தெளிக்கும் செலவும் குறைகிறது. நெல்லுக்கு மட்டுமல்ல அனைத்து பயிர்களுக்கும் வரப்பு பயிர் செய்து கூடுதல் வருமானம் பெருக்க வேண்டும். எலிதாக்குதலும் பூச்சி தாக்குதலும் இல்லாமல் நெற்பயிரை பாதுகாக்கிறது. பூச்சிகள் நெற்பயிரை தாக்காமல் உளுந்து பயிரின் இலைகளை தின்கிறது.
இந்த நடைமுறையை பின்பற்றினால் நெற்பயிரில் மகசூல் சேதாரமின்றி கூடுதல் மூடைகளும் வரப்போர உளுந்து பயிர்களால் தனி வருமானமும் கிடைக்கும் என்றார்.
- எம்.எம்.ஜெயலெட்சுமி, மதுரை