/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சித்திரை திருவிழாவிற்கு மின் இணைப்பு கோவில் நிர்வாகத்திடம் மாநகராட்சி 'கறார்'
/
சித்திரை திருவிழாவிற்கு மின் இணைப்பு கோவில் நிர்வாகத்திடம் மாநகராட்சி 'கறார்'
சித்திரை திருவிழாவிற்கு மின் இணைப்பு கோவில் நிர்வாகத்திடம் மாநகராட்சி 'கறார்'
சித்திரை திருவிழாவிற்கு மின் இணைப்பு கோவில் நிர்வாகத்திடம் மாநகராட்சி 'கறார்'
ADDED : ஏப் 12, 2025 02:02 AM
மதுரை:'மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவிற்கு மின் இணைப்பு வழங்க வேண்டுமானால், பழைய பாக்கி ஒரு கோடி ரூபாயை செலுத்த வேண்டும்' என மாநகராட்சி நிபந்தனை விதித்துள்ளது.
சித்திரைத் திருவிழா ஏப்., 29ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதற்காக கோவில் நிர்வாகம் மாசி, சித்திரை வீதிகளில் மாநகராட்சியிடம் தற்காலிக மின் இணைப்பு பெறுவது வழக்கம். இந்தாண்டு சித்திரை திருவிழா ஏற்பாடுகள் குறித்து மதுரையில் கலெக்டர் சங்கீதா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் மாநகராட்சி கமிஷனர் சித்ரா, மீனாட்சி கோவில் இணை கமிஷனர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வழக்கம் போல இந்தாண்டும் தற்காலிக மின் இணைப்பு வழங்க வேண்டும் என கோவில் தரப்பில் மாநகராட்சியிடம் வலியுறுத்தப்பட்டது. அப்போது பேசிய கமிஷனர், ''ஏற்கனவே ஒரு கோடி ரூபாய் பாக்கி உள்ளது.
அதை செலுத்துமாறு அறநிலையத்துறை கமிஷனருக்கு கடிதம் எழுதி விட்டோம். செலுத்த வில்லை என்றால், மின்வாரியத்திடம் மின் இணைப்பை பெற்றுக்கொள்ளுங்கள்,'' என 'கறாராக' கூறினார்.
அதைக் கேட்ட கோவில் இணை கமிஷனர் கிருஷ்ணன் நெளிந்தார்.
கடந்தாண்டும் இதே பிரச்னை எழுந்தது. அப்போதைய கமிஷனர் தினேஷ்குமார், பழைய பாக்கியை செலுத்துமாறு வலியுறுத்தினார்.
அப்போதும் கோவில் நிர்வாகம் தரப்பில் முறையான பதில் அளிக்கவில்லை. கலெக்டர் சங்கீதா தலையிட்டு, மாநகராட்சியே தற்காலிக மின் இணைப்பு வழங்க ஏற்பாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

