/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் மாநகராட்சி கவுன்சிலர்கள் ஓடுறாங்க...
/
மக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் மாநகராட்சி கவுன்சிலர்கள் ஓடுறாங்க...
மக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் மாநகராட்சி கவுன்சிலர்கள் ஓடுறாங்க...
மக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் மாநகராட்சி கவுன்சிலர்கள் ஓடுறாங்க...
ADDED : நவ 01, 2025 03:03 AM

மதுரை: மதுரை மாநகராட்சியில் மண்டல கூட்டங்கள் நடக்காததால் வார்டுகளில் எந்த வேலையும் நடக்கவில்லை. அதற்கான நிதி ஒதுக்கீடும் சரிவர இல்லாததால் கவுன்சிலர்களை கேள்விகளால் மக்கள் துளைத்தெடுக்கின்றனர். சென்னையை அடுத்து அதிக மக்கள் தொகை, வார்டுகளை கொண்ட மாநகராட்சி மதுரை. இங்கு மேயர் பதவி 15 நாட்களுக்கும் மேலாக காலியாக உள்ளது. மண்டலத் தலைவர்களும் இல்லை. ஒவ்வொரு வார்டுக்கும் தேவையான பணிகள் குறித்து மண்டல கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றி, அதை ஒவ்வொரு மாதமும் மேயர் தலைமையில் நடக்கும் கவுன்சில் கூட்டத்தில் அனுமதி பெற்றால் தான் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய முடியும்.
ஆனால் ஆறு மாதங்களாக மண்டல கூட்டங்கள் நடக்கவில்லை. வார்டுகளில் பாதாள சாக்கடை மூடிகள் உடைந்ததை மாற்றுவது, குடிநீர் கசிவை சரி செய்வது, ரோடுகளில் 'பேட்ஜ் ஒர்க்' மேற்கொள்வது, பூங்கா பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் முடங்கி கிடக்கின்றன. மண்டல தலைவர்கள் இல்லாத நிலையில் அந்தந்த உதவி கமிஷனர்கள் தலைமையில் ஒரு மாதத்திற்கு முன் மண்டல கூட்டம் நடந்தது. ஆனாலும் இதுவரை 'ஒர்க் ஆர்டர்', நிதி ஒதுக்கீடு இல்லை. இதனால் கவுன்சிலர்களை மக்கள் கேள்விகளால் துளைத்தெடுக்கின்றனர். விட்டால் போதும் என கவுன்சிலர்கள் தெறித்து ஓடுகின்றனர்.
மாநகராட்சி அ.தி.மு.க., எதிர்க்கட்சி தலைவர் சோலை ராஜா கூறியதாவது: மேயர், மண்டல தலைவர்கள் இல்லாததால் ஆளுங்கட்சி கவுன்சிலர்களே கடும் அதிருப்தியில் உள்ளனர். துணைமேயரை வைத்து கூட்டம் நடத்த ஆளுங்கட்சிக்கு விருப்பம் இல்லை என்றாலும் நுாறு வார்டுகளின் 20 லட்சம் மக்கள் நலனை மனதில் கொண்டு அக்டோபருக்கான கவுன்சில் கூட்டம் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் அதிலும் தி.மு.க., அரசியல் செய்கிறது.
கவுன்சிலர்களுக்கு வார்டு மேம்பாட்டு நிதி ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டது. முதற்கட்டமாக ரூ.10 லட்சத்திற்கான 'ஒர்க் ஆர்டர்' பெற்று வேலைகள் நடந்தன. ஆனால் மண்டல கூட்டங்கள் நடக்காததால் மீதமுள்ள ரூ.15 லட்சத்தை பெற்று வார்டுகளில் வேலை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இப்பிரச்னைக்கு தீர்வாக உதவி கமிஷனர்கள் தலைமையில் நடந்த மண்டலக் கூட்டங்களில் வார்டுகளுக்கு தேவையான திட்டம் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றியதுடன் உள்ளது. அதை அனுமதித்து அதற்கான நிதியை ஒதுக்க வேண்டுமென்றால் கவுன்சில் கூட்டம் நடத்தியிருக்க வேண்டும். எனவே அதிகாரிகள் தலைமையில் மண்டல கூட்டங்கள் நடத்தியது கண்துடைப்பாக உள்ளது. ஆளுங்கட்சி செய்யும் அரசியல் நாடகத்தால் மக்கள் நலனை காக்க வேண்டிய மாநகராட்சி முடங்கியுள்ளது. இதை கண்டித்து அ.தி.மு.க., தொடர் போராட்டங்களை நடத்தும் என்றார்.

