/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநகராட்சி கூட்டத்தில் வாய்ப்பில்லா கவுன்சிலர்கள் புலம்பல்.. 'எங்களை பேச விடுங்க'; நேரமில்லை என்று தொடர்ந்து அனுமதி மறுப்பதா எனக்கேள்வி
/
மாநகராட்சி கூட்டத்தில் வாய்ப்பில்லா கவுன்சிலர்கள் புலம்பல்.. 'எங்களை பேச விடுங்க'; நேரமில்லை என்று தொடர்ந்து அனுமதி மறுப்பதா எனக்கேள்வி
மாநகராட்சி கூட்டத்தில் வாய்ப்பில்லா கவுன்சிலர்கள் புலம்பல்.. 'எங்களை பேச விடுங்க'; நேரமில்லை என்று தொடர்ந்து அனுமதி மறுப்பதா எனக்கேள்வி
மாநகராட்சி கூட்டத்தில் வாய்ப்பில்லா கவுன்சிலர்கள் புலம்பல்.. 'எங்களை பேச விடுங்க'; நேரமில்லை என்று தொடர்ந்து அனுமதி மறுப்பதா எனக்கேள்வி
ADDED : பிப் 27, 2025 06:19 AM

மாநகராட்சியின் 100 வார்டுகளில் நிலவும் மக்கள் பிரச்னைகளை மேயர், கமிஷனர் கவனத்திற்கு நேரடியாக கொண்டு சென்று முறையிட்டு, அதற்கான தீர்வை ஏற்படுத்தவும், வார்டுகளுக்கு தேவையான திட்டங்களை கேட்டு பெறவும் மாதந்தோறும் கவுன்சிலர்கள் கூட்டம் நடக்கிறது.
ஒவ்வொரு கூட்டம் நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன் கூட்டத்தில் பேச வேண்டியதை முன்கூட்டியே மேயருக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும். ஒப்புதல் பெற்ற கேள்விகளுக்கு மட்டுமே மேயர், கமிஷனர் பதில் அளிப்பர். மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் என அனைவரும் பேச வாய்ப்பு கேட்டாலும் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே தொடர்ந்து பேச வாய்ப்பு அளிக்கப்படுவதாக கவுன்சிலர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
மேயருக்கு மாதம் ரூ.30 ஆயிரம், துணை மேயருக்கு ரூ.15 ஆயிரம், கவுன்சிலர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் என அரசு சார்பில் மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்கப்படுகிறது. கூட்டத்தில் பங்கேற்கும் போது அத்தொகையை கவுன்சிலர் பெறுகின்றனர்.
ஆனால் வார்டுகளில் நிலவும் மக்கள் பிரச்னைகளை பேச முடியவில்லை. ஒவ்வொரு முறையும் மதிப்பூதியத்தை வாங்கும்போது மனசாட்சிக்கு பதில் சொல்லமுடியாமல் தவிப்பதாக கவுன்சிலர்கள் புலம்புகின்றனர். 33 வது வார்டு கவுன்சிலர் மாலதி, 'இதுவரை 36 கூட்டங்கள் நடந்துள்ளன. இதில் 5 கூட்டங்களில் மட்டுமே பேச வாய்ப்பு அளிக்கப்பட்டதாக' தெரிவித்தார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட கவுன்சிலர்கள் கூறியதாவது: ஒவ்வொரு வார்டிலும் குடிநீர், சாக்கடை, ரோடு, தெரு விளக்கு, வரியில் முரண்பாடு, பாதாளச் சாக்கடை என பல்வேறு பிரச்னைகள் உள்ளன. இவற்றை அதிகாரிகளிடம் கொண்டு சென்று கவுன்சிலர்கள் தீர்த்து வைப்பர் என நம்பித்தான் எங்களை தேர்வு செய்தனர்.
ஆனால் பேசும் வாய்ப்பு எளிதில் கிடைப்பதில்லை. கவுன்சில் கூட்டம் காலை 10:30 மணிக்கு துவங்கி மதியம் 1:00 மணிக்குள் முடிக்கப்படுகிறது.
இதில் 5 மண்டல தலைவர்கள், எதிர்க்கட்சி தலைவர், கட்சி பிரதிநிதிகள், கடைசியாக நிலைக்குழு தலைவர்கள் மட்டுமே பேசுகின்றனர். அவர்களுக்கான நிமிடங்களுக்கும் மேலாக பேசுகின்றனர். அ.தி.மு.க., கவுன்சிலர்களுக்கான வாய்ப்பு கூட ஆளுங்கட்சியினருக்கு கிடைப்பதில்லை.
விமர்சனத்துடன் புகார்களை முன்வைப்போருக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. 'நீங்கள் கூட்டத்திற்கு சென்றீர்களா, பேசினீர்களா, நாளிதழ்களில் உங்கள் பேச்சு விவரம் வரவில்லையே' என வார்டு மக்கள் கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர். எனவே அனைவருக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும். இனிவரும் கூட்டங்களிலாவது மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் சித்ரா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.