/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் நாய் குறுக்கிட்டதால் டூவீலரிலிருந்து விழுந்த தம்பதி பஸ் மோதி பரிதாப பலி
/
மதுரையில் நாய் குறுக்கிட்டதால் டூவீலரிலிருந்து விழுந்த தம்பதி பஸ் மோதி பரிதாப பலி
மதுரையில் நாய் குறுக்கிட்டதால் டூவீலரிலிருந்து விழுந்த தம்பதி பஸ் மோதி பரிதாப பலி
மதுரையில் நாய் குறுக்கிட்டதால் டூவீலரிலிருந்து விழுந்த தம்பதி பஸ் மோதி பரிதாப பலி
ADDED : நவ 19, 2025 08:00 AM

அலங்காநல்லுார்: மதுரை அருகே சிக்கந்தர் சாவடியில் டூவீலரில் சென்றபோது நாய் குறுக்கே வந்ததால் தடுமாறி கீழே விழுந்த தம்பதி பின்னால் வந்த பஸ் மோதி பரிதாபமாக பலியாயினர்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் மீனாம்பிகைநகரைச் சேர்ந்தவர் வெங்கடசுப்பு 56. இவரது மனைவி பத்மாவதி 49. அலங்காநல்லுார் ரோட்டில் பாசிங்காபுரம் அருகே டீக்கடை நடத்தி வந்தனர். இவர்களது மகன், மகள் திருமணமாகி மும்பை, சென்னையில் வசிக்கின்றனர்.
நேற்று அதிகாலை 5:30 மணிக்கு கணவனும், மனைவியும் வீட்டில் இருந்து டூவீலரில் டீக்கடைக்கு சென்றனர். சிக்கந்தர் சாவடி அருகே நாய் ஒன்று குறுக்கே வந்ததால் உடனடியாக பிரேக் அடித்த போது நிலை தடுமாறி கீழே விழுந்தனர். பின்னால் வந்த டவுன் பஸ்சில் சிக்கி வெங்கடசுப்பு சம்பவயிடத்தில் பலியானார். தலையில் பலத்த காயமுற்ற பத்மாவதி மதுரை அரசு மருத்துவமனையில் இறந்தார்.
ரோட்டில் திரியும் நாய்களால் விபத்து மதுரை
நகரையொட்டி குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. அருகில் உள்ள கோவில்பாப்பாகுடி ஊராட்சியில் குடியிருப்புகள் அதிகம். இங்கு ரோட்டோரம் கொட்டப்படும் குப்பை, இறைச்சி கழிவுகளில் உணவுக்காக கூட்டம் கூட்டமாக நாய்கள் திரிகின்றன. இவற்றால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை' என அப்பகுதியினர் குற்றம் சாட்டினர்.
சுப்ரீம் கோர்ட் உத்தரவு என்னாச்சு
பொது இடங்கள், ரோடுகளில் திரியும் தெருநாய்களை அகற்றி அவற்றிற்கு கருத்தடை தடுப்பூசி போட்டு காப்பகங்களில் அடைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட்டது. அதற்கான முயற்சிகளை எந்த உள்ளாட்சியும் எடுக்கவில்லை. கிராமங்கள் மட்டுமின்றி நகரங்களிலும் தெருக்களில், நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் செல்லும் போது சர்வசாதாரணமாக நாய்கள் குறுக்கே பாய்கின்றன. இதனால் விபத்துக்கள் தொடர்கின்றன.
சில நாட்களுக்கு முன் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகில் டூவீலரில் சென்றவர் நாய் குறுக்கே வந்ததால் தடுமாறி விழுந்து இறந்தார். நேற்றைய விபத்தில் இரு உயிர்கள் பறிபோயின.
ஒன்றிய நிர்வாகம் சொல்வது என்ன
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் கூறுகையில், ''அதிகரித்துள்ள நாய்களை கட்டுப்படுத்த அவற்றை பிடித்து என்.ஜி.ஓ.,க்கள் நடத்தும் காப்பகங்களில் விட நடவடிக்கை எடுத்து வருகிறோம். நீதிமன்ற உத்தரவு தொடர்பான அரசாணை எதுவும் கிடைக்கவில்லை,'' என்றனர்.

