ADDED : அக் 25, 2025 04:36 AM
மதுரை: மதுரையில் 'ரபி' (சம்பா) சிறப்பு பருவ பயிர்களுக்கு நவ. 15 க்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என வேளாண்மை இணை இயக்குநர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2025 -- 26க்கான 'ரபி' சிறப்பு பருவத்தில் மதுரை மாவட்டத்திற்கான பயிர் காப்பீட்டுத் திட்டம் 'யுனிவர்சல் சோம்போ ஜெனரல் இன்சூரன்ஸ்' நிறுவனம் மூலம் செயல்படுகிறது. நெல், மக்காச்சோளம், பருத்தி ( நிலை 11 )பயிர்களுக்கு கடன் பெறும் விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அல்லது தேசிய வங்கி மூலம் பயிர் காப்பீட்டுக்கு பதிவு செய்யலாம். கடன் பெறாத விவசாயிகள் நடப்பு ஆண்டுக்கான அடங்கல் சான்றை வி.ஏ.ஓ.விடம் பெற்று சிட்டா, வங்கிக் கணக்கு புத்தகம், ஆதார் அட்டை ஆகியவற்றை இணைத்து பொது சேவை மையம், கடன் சங்கம் அல்லது தேசிய வங்கிகளில் பதிவு செய்யலாம்.
நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.540, மக்காசோளத்திற்கு ரூ.484, பருத்திக்கு ரூ.222 வீதம் பிரிமீயத் தொகையை நவ.15க்குள் செலுத்த வேண்டும். பதிவு செய்யும்போது விவசாயி பெயர், முகவரி, நிலப்பரப்பு, சர்வே எண், உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலத்தை கவனித்து பதிவு செய்ய வேண்டும் என்றார்.

