/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பதராகும் பயிர்கள்: பதறும் விவசாயிகள்
/
பதராகும் பயிர்கள்: பதறும் விவசாயிகள்
ADDED : ஜன 01, 2026 05:47 AM

மேலுார்: நேரடி பாசனத்திற்கு தண்ணீர் திறக்காததால் நெற்பயிர்கள் பதராகி விடுமோ என்று பல ஆயிரம் விவசாயிகள் பதற்றத்தில் உள்ளனர்.
தனியாமங்கலத்தில் இருந்து இ.மலம்பட்டி வரை செல்லும் 11 வது கால்வாயால் 20க்கும் மேற்பட்ட கண்மாய்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் நேரடி பாசனம் பெறும்.
இக்கால்வாயில் தண்ணீர் திறந்து 12 நாட்களாவதால் பயிர்கள் பதராகும் நிலையில் உள்ளன. அதிகாரிகள் தண்ணீர் திறக்காததால் 'பயிர் என்னும் உயிரை' கொலை செய்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
சருகுவலையப்பட்டி விவசாயி பாண்டி கூறியதாவது : கூட்டுறவு சங்கத்தில் கடன் வாங்கி நெல்நடவு செய்து 77 நாட்களாக ரூ.30 ஆயிரம் செலவு செய்துள்ளோம். தண்ணீர் கேட்டு பதரான பயிர்களுடன் நீர்வளத்துறை அலுவலகத்திற்கு சென்றால் அதிகாரிகள் குறைந்த அளவு தண்ணீர் வருவதாக கூறுவதுடன், இன்று, நாளை என அலைக்கழிக்கின்றனர்.
கடன்களை கட்ட முடியாமல் வாழ்வாதாரம் கேள்விக்குறியாவதால், திகைப்பில் உள்ளோம். மாவட்ட நிர்வாகம் பயிர்கள் விளைச்சலுக்கு தேவையான அளவு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
நிர்வாக பொறியாளர் ஜெயராமன் கூறுகையில், உடனே தண்ணீர் திறப்பதுடன், விவசாயிகளின் தேவை பூர்த்தியானபின்பு தண்ணீர் நிறுத்தப்படும் என்றார்.

