/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நிதி ஒதுக்கியும் பணி நடக்காத ஊருணிகள் 'கப்'படிக்குது டி.கல்லுப்பட்டி
/
நிதி ஒதுக்கியும் பணி நடக்காத ஊருணிகள் 'கப்'படிக்குது டி.கல்லுப்பட்டி
நிதி ஒதுக்கியும் பணி நடக்காத ஊருணிகள் 'கப்'படிக்குது டி.கல்லுப்பட்டி
நிதி ஒதுக்கியும் பணி நடக்காத ஊருணிகள் 'கப்'படிக்குது டி.கல்லுப்பட்டி
ADDED : செப் 25, 2024 03:21 AM

டி.கல்லுப்பட்டி, : 'டி.கல்லுப்பட்டி மூப்பன் ஊருணி, அழகு நாச்சி ஊருணிகளை துார்வாராமல், கழிவுநீர் தேக்கப் பயன்படுத்துவதால் நகருக்குள் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் அதிகரித்து பொதுமக்கள் தொற்று நோய் அச்சத்தில் உள்ளனர்.
ஐந்தாண்டுகளுக்கு முன்புகூட குளியல் குளமாக இருந்த மூப்பன் ஊருணி, அழகு நாச்சி ஊருணிகள் தற்போது சாக்கடை குளமாக மாறிவிட்டன. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. தெருக்களில் தண்ணீர் தேங்கக் கூடாது என வலியுறுத்தி, தெருவுக்குத் தெரு பிளக்ஸ் போர்டு வைத்துள்ளது டி.கல்லுப்பட்டி பேரூராட்சி.
ஆனால் அவர்களின் சுகாதார சேவையோ படுமோசமாக உள்ளது. பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் இப்பகுதியில் பெரும் குளமாக சாக்கடை தேங்கி நிற்கிறது. மூப்பன் ஊரணியை துார்வாரி, கரையில் நடைபாதை அமைத்து, மரங்கள் வளர்க்க ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கி ஆறு மாதங்கள் ஆகியும் பணிகள் எதுவும் துவங்கவில்லை. அதேபோல் அழகுநாச்சி ஊருணிக்கும் அம்ருத் திட்டத்தில் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கி 6 மாதங்கள் ஆகியும் வேலை நடக்காமல் உள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ''இரண்டு ஊருணிகளும் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளன. இதை துார்வார வேண்டுமெனில் ஆக்கிரமிப்பை அகற்றியாக வேண்டும். ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக பேரூராட்சி நிர்வாகம் இந்த வேலையை கிடப்பில் போட்டுள்ளது'' என்றனர்.
பகலிலும் கொசுக் கடி
பகலில் படையெடுக்கும் கொசுக்களை கட்டுப்படுத்தத் தெரியாமல் மக்கள் அலறுகின்றனர். பகலில் கடிக்கும் கொசுக்கள் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் என்பதால் உடனே கட்டுப்படுத்த வேண்டும்.
இதுதொடர்பாக மனுகொடுத்தும் நடவடிக்கை இல்லை. போர்க்கால அடிப்படையில் பணிகளை துவக்க கலெக்டர் சங்கீதா நடவடிக்கை எடுக்க வேண்டும்.