ADDED : ஜூன் 12, 2025 02:14 AM

பாலமேடு: பாலமேடு அருகே சல்லி கோடாங்கிபட்டியில் சேதமடைந்த வனக்குழு கட்டடத்தால் விபத்து அபாயம் உள்ளது.
கடந்த 1997ல் தமிழக வனத்துறையின் காடு வளர்ப்பு திட்டத்தில் வனப்பகுதி அருகே உள்ள கிராமங்களில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை கொண்டு கிராம வனக்குழுக்கள் உருவாக்கப்பட்டன.காடு வளர்ப்பின் நன்மைகள், வன பாதுகாப்பு குறித்து பொது மக்களுக்கு குழு மூலம் விழிப்புணர்வு, மாற்று தொழில் உதவிகள் வழங்க கிராம வனக்குழு கட்டடம் கட்டப்பட்டது.
வனக்குழு செயற்குழு உறுப்பினர் கண்ணையா: 6 ஆண்டாக வனக்குழு மாதாந்திர கூட்டம் நடக்கவில்லை. வனத்துறை, வனக்குழுவிற்கு வழங்கிய வாடகை சமையல் பாத்திரங்களை சேதமடைந்த குழு கட்டடத்தில் வைக்க முடியவில்லை. கிராம சாவடியில் வைத்துள்ளோம். வனத்துறை பரிந்துரையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் 4 மாதங்களுக்கு முன் ஆய்வு செய்தனர். இதனருகே உள்ள துவக்க பள்ளி மாணவர்கள் இக்கட்டட பகுதியில் விளையாடுவதால் விபத்து அபாயம் உள்ளது. புதிய கட்டடம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.