/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மழையால் முளைவிடும் சேதமடைந்த நெல் மணிகள்
/
மழையால் முளைவிடும் சேதமடைந்த நெல் மணிகள்
ADDED : ஜன 22, 2024 05:22 AM

எழுமலை: எழுமலை பகுதியில் மழையால் சேமதடைந்த பயிர்கள், வயலில் முளைவிடும் அவலம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எழுமலை வட்டார கிராமங்களில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன. இவை அறுவடையாக வேண்டிய நேரத்தில் தொடர் மழையால் பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தன. சில நாட்களில் வெயில் அடிக்கும்போது, நெற் கதிர்களை அறுவடை செய்து நஷ்டத்தை ஓரளவு சரிக்கட்டலாம் என, விவசாயிகள் காத்திருந்தனர்.
ஆனால் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருவதால் நிலத்தில் ஈரப்பதம் காயாமல் போனது. தற்போது வயலில் சாய்ந்த கதிர்களில் உள்ள நெல்மணிகள் முளைவிடத் துவங்கியுள்ளதால் அறுவடையாகாமலே சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
செல்லாயிபுரம் சுந்தரம் கூறியதாவது: நான்கு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்கிறேன். இந்தாண்டு நெற்கதிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராகும் நிலையில் இருந்தன. பத்து தினங்களுக்கு முன்பு பெய்த மழையால் பயிர்கள் சேதமடைந்தன. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வருவாய், வேளாண் துறை அதிகாரிகள் கணக்கெடுத்துச் சென்றுள்ளனர்.
சில நாட்களில் வெயில் அடிக்கும்போது, நஷ்டமின்றி தப்பிவிடலாம் என்று நினைத்தேன். அதற்குள் மீண்டம் மழை பெய்து வருகிறது.
வயலில் சாய்ந்த நெல்மணிகள் முளைவிடத் துவங்கியுள்ளன. அறுவடை செய்தாலும் முழுப்பலனும் கிடைக்காது, என்றார்.