ADDED : செப் 25, 2024 03:14 AM

பேரையூர், : வீடுகளுக்கு முன்பு சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பங்களால் மக்கள் அச்சப்படுகின்றனர்.
பேரையூர் அப்பாஸ் நகரில் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு பேரையூர் துணை மின் நிலையத்தில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்ட மின் கம்பம் வழியாக மின்சப்ளை செய்யப்படுகிறது.
மின்கம்பம் அமைத்து 25 ஆண்டுகளுக்கும் மேலானதால் தற்போது சேதமடைந்து அடிப்பகுதியில் விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது.
தெருவில் நடப்பதற்கு மக்கள் அச்சப்படுகின்றனர். வீடுகளுக்கு முன்பு விளையாடும் குழந்தைகள், மாணவர்கள் ஒருவித அச்சத்துடனே விளையாடுகின்றனர்.
இதேபோல் பேரையூரில் பல இடங்களில் சேதமடைந்த மின் கம்பங்களால் அப்பகுதியில் உள்ளவர்களும் அச்சத்தில் உள்ளனர். சேதமடைந்துள்ள மின்கம்பங்களை மாற்ற மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர்.