மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் தண்டியில் காந்தி உப்பு காய்ச்சிய 95வது ஆண்டு தினம் நடந்தது. மியூசிய செயலாளர் நந்தாராவ் தலைமை வகித்தார். ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், கல்வி அலுவலர் நடராஜன் முன்னிலை வகித்தனர்.
வரலாற்று சிறப்புமிக்க தண்டியாத்திரை எனும் தலைப்பில் மீனாட்சி அரசு கல்லுாரி வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியை விமலா பேசுகையில், ''1930 மார்ச் 12ல் 78 பேருடன் தனது சபர்மதி ஆசிரமத்தில் காந்தி தொடங்கிய அகிம்சை வழியிலான தண்டி உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் மாணவர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள் என லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஏப். 6ல் தண்டி கடற்கரையில் உப்பு காய்ச்சி ஆங்கிலேயரின் உப்புச் சட்டத்தை உடைத்தார்'' என்றார். காந்தியின் கொள்ளுப்பேத்தி நீலாம்பென் பாரிக் மறைவுக்கு மவுனஅஞ்சலி செலுத்தப்பட்டது. யோகா மாணவி சக்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் மேலாளர் மணிமாறன், ஆசிரியை காளீஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.