ADDED : டிச 26, 2025 06:13 AM

சோழவந்தான்: சோழவந்தான் அருகே திருமால்நத்தம் கால்வாய் பாலத்தில் உருவாகியுள்ள பள்ளத்தால் விபரீதம் நடக்க வாய்ப்புள்ளது.
இங்கு மயானம் அருகே தச்சம்பத்து ரோட்டில் மழைநீர் உபரிக் கால்வாயின் மீது கான் கிரீட் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் சேதமடைந்து காரைகள் பெயர்ந்து சிறிய ஓட்டை விழுந்து தற்போது பயங்கரமான பள்ளமாக மாறி கம்பிகள் தெரியும் நிலை உள்ளது. தற்காலிகமாக கம்பியின் உதவியுடன் உடை கற்கள் கொண்டு மூடப்பட்டுள்ளது.
விவசாயம், வேலை உள்ளிட்டவற்றிற்காக தினமும் ஏராளமானோர் இப்பாலத்தின் வழியே சென்று வருகின்றனர். பகலிலேயே பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் பலர் விழுந்து காயமடைகின்றனர்.
இரவில் விளக்குகள் இல்லாததாலும் வளைவுப் பகுதி என்பதாலும் விபத்து ஏற்பட்டு விபரீதம் நடக்க வாய்ப்புள்ளது.
மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

