/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நத்தம் ரோட்டில் கால்நடைகளால் ஆபத்து
/
நத்தம் ரோட்டில் கால்நடைகளால் ஆபத்து
ADDED : நவ 21, 2025 04:10 AM

மதுரை: மதுரை - நத்தம் ரோட்டில் ஏராளமான கால்நடைகள் நடமாட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே பயணிக்கின்றனர்.
இந்த ரோட்டில் திருப்பாலை மின்வாரிய அலுவலகம், பொறியாளர் நகர், யாதவர் கல்லுாரி பகுதிகளில் ஏராளமான மாடுகள் திரிகின்றன. ரோட்டில் சாவகாசமாக நடைபோடும் இக்கால்நடைகளால் வாகனங்களில் செல்வோர் அச்சமுடனே பயணிக்க வேண்டியுள்ளது. இந்த ரோடு விரிவுபடுத்தப்பட்டு 7 கி.மீ.,க்கு மேம்பாலமும் அமைக்கபட்டுள்ளதால் ரோட்டில் நல்ல நிழல் உள்ளது. நடுவில் பில்லர்களும் உள்ளன.
இதனருகில் மாடுகள் படுத்து உறங்குகின்றன. சில நடுரோட்டில் நின்று கொள்கின்றன. இரவில் அவ்வழியில் டூவீலரில் பயணிப்போர் மாடுகள் நிற்பது தெரியாமல் விரைந்து சென்று மோதி விபத்துக்குள்ளாகின்றனர். ஏராளமானோர் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர்.
சமீபத்தில் போலீஸ் எஸ்.ஐ., ஒருவரும் மாட்டின்மீது மோதி கீழே விழுந்து காயமடைந்துள்ளார். மாடுகளை ரோட்டில் திரியவிடும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை இல்லாததே இந்நிலைக்கு காரணம். இதுபோன்ற சம்பவங்களால் விபரீதம் விளையும் முன் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

