/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கனவுகளை வென்று 'கனா காணும்' தர்ஷினி
/
கனவுகளை வென்று 'கனா காணும்' தர்ஷினி
ADDED : டிச 22, 2024 07:55 AM

இவர் மனம் திறந்ததாவது:
எனக்கு சிறுவயதிலிருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. பெற்றோரும் ஊக்கப்படுத்தினர். சென்னையில் நடக்கும் சினிமா ஆடிஷன்களில் பங்கேற்க நானும் அம்மாவும் வருவோம். ஆடிஷன்களில் பங்கேற்று வீட்டிற்கு வந்துவிட்டு, அழைப்புகள் வரும் என நம்பிக்கையோடு காத்திருப்பேன். வராது இருந்தபோதிலும் மனம் தளரவில்லை.
2015ல் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள பயன்பாடுகள் அதிகளவில் இல்லை என்பதால் சினிமா வாய்ப்பு கிடைப்பதற்காக போட்டோ ஷூட் எடுக்க ஆரம்பித்து அதிலிருந்து போட்டோக்களை ஆல்பமாக தயாரித்து அதை ஒவ்வோரு இயக்குனர்கள் அலுவலகத்திலும் கொடுத்தேன்.
பிறகு சென்னைக்கு குடும்பத்தோடு வந்தோம். இங்கிருந்து சினிமா வாய்ப்பு தேட எளிதாக இருந்தது. நண்பர் ஒருவர் மூலமாக முதன் முதலில் 'காண்டம்' எனும் குறும்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் 'திருடனை பார்த்தால் சொல்லாதிங்க' எனும் குறும்படத்தில் நடித்தேன். இதனை தொடர்ந்து அதர்வாவிற்கு சகோதரியாக 'ஒத்தைக்கு ஒத்த' எனும் படத்தில் நடித்தேன். ஆனால் அந்த படம் வெளியாகவில்லை. 2019ல் ஐஸ்வர்யா ராஜேஷூடன் 'திட்டம் இரண்டு' எனும் படத்தில் அவரது சிறு வயது கதா பாத்திரத்தில் நடித்தேன். அது எனக்கு பெயர் வாங்கி தந்தது. இருந்தாலும் மக்கள் என்னை அடையாளப்படுத்தும் அளவிற்கு கதாபாத்திரங்கள் அமையவில்லை.
அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' எனும் படத்தில் நடிகை அனிகா சுரேந்திரன் நடித்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான ஆடிஷனில் பங்கேற்றேன். ஆனால் அந்த வாய்ப்பு கை நழுவியது. 'மகாராஜா' படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடிப்பதற்கான ஆடிஷனில் பங்கேற்றேன். அதுவும் ஏதோ காரணத்தால் கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட எத்தனையோ புறக்கணிப்புகளை சந்தித்து கொஞ்சம் கூட மனம் தளராமல் நமக்கான இடம் கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு பெற்றோரின் துணையோடு வாழ்வின் தேடலை ஆரம்பித்தேன். அந்த நேரத்தில் நல்வாய்ப்பாக 'கனா காணும் காலங்கள்' எனும் வெப்சீரிசில் 'யாமினி' எனும் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. மெல்ல மக்கள் மத்தியில் முகம் பதியத் தொடங்கியுள்ளது.
என் முகம் குழந்தை போன்று இருப்பதால் தங்கை, தோழிகள் போன்ற கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வருகிறது. தற்போது 'சின்ன மருமகள்' எனும் சீரியலில் ஹீரோயினுக்கு தங்கையாக நடிக்கிறேன். சீரியல்கள் பொதுவாக ரயில் பயணங்கள் போல் நெடுந்துாரம் செல்லும். திரைப்படங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடியும். தொடர்ந்து நல்ல பட வாய்ப்புகளை பெறுவதற்காக முயற்சி செய்து வருகிறேன்.
நடனம் ஆடுவது, விளையாட்டில் பேட்மின்டன் ஆடுவது பொழுதுப்போக்கு. நடிகையாகவில்லை என்றால் விளையாட்டு வீராங்கனையாக உருவெடுத்திருப்பேன்.
வாய்ப்புகள் கிடைக்க தாமதமானாலும் அதற்காக காத்திருந்து இலக்கை அடையும் வரை போராட வேண்டும். அப்படி போராடி அடைந்த வெற்றி என்றும் நம் பெயர் சொல்லும். நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கவே விரும்புகிறேன் என்றார்.
பலரும் வாழ்வில் சாதனையாளர்களாக மாற வேண்டும் என அவரவருக்கு பிடித்த துறைகள் பற்றி கனவு காண்கின்றனர். அதை கனவாக மட்டும் சிலர் பார்க்கின்றனர். ஒரு சிலர் தான் கண்ட கனவுகளை நனவாக மாற்றுவதற்காக போராடி வாழ்வில் வெற்றி பெற்று கனவுகளையும் தாண்டி செல்கின்றனர். அப்படிப்பட்டவர் தான் 19 வயதான திருச்சியை பூர்வீகமாக கொண்ட இளம்நடிகை தர்ஷினி. சென்னையில் கல்லுாரி இரண்டாம் ஆண்டு படித்து வரும் இவர் குறும்படம், தொலைக்காட்சி தொடர்கள், வெப்சீரிஸ்கள், திரைப்படங்களில் நடித்து தன்னை மக்கள் மத்தியில் அடையாளப்படுத்துகிறார்.