/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மின்சாரம் தாக்கி பலி; ரூ.5 லட்சம் இழப்பீடு உயர்நீதிமன்றம் உத்தரவு
/
மின்சாரம் தாக்கி பலி; ரூ.5 லட்சம் இழப்பீடு உயர்நீதிமன்றம் உத்தரவு
மின்சாரம் தாக்கி பலி; ரூ.5 லட்சம் இழப்பீடு உயர்நீதிமன்றம் உத்தரவு
மின்சாரம் தாக்கி பலி; ரூ.5 லட்சம் இழப்பீடு உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஏப் 01, 2025 05:28 AM
மதுரை : ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி விவசாயி இறந்ததற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க மின்வாரியத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
முதுகுளத்துார் அருகே புளியங்குடி காளிமுத்து தாக்கல் செய்த மனு: என் தந்தை குருசாமி விவசாய நிலத்திற்கு 2011 ல் சென்ற போது மின்கம்பி அறுந்து தரையில் விழுந்து கிடந்தது. அதை அவர் கவனிக்காமல் மிதித்ததில் மின்சாரம் தாக்கி இறந்தார். முதுகுளத்துார் போலீசார் வழக்கு பதிந்தனர். ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி தமிழக மின்வாரிய தலைவர், ராமநாதபுரம் கண்காணிப்பு பொறியாளர், பரமக்குடி உதவி செயற்பொறியாளருக்கு மனு அனுப்பினேன். இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி வி.லட்சுமிநாராயணன்: மின்கம்பி அறுந்து விழுந்து, மின்சாரம் தாக்கியதில் குருசாமி இறந்ததை மின்வாரியம் ஒப்புக் கொள்கிறது. சம்பவத்திற்கு முதல்நாள் பலத்த காற்று, மழையின் காரணமாக மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது. தற்செயலாக நடந்ததற்கு பொறுப்பேற்க முடியாது. வழக்கு தாக்கல் செய்வதில் 10 ஆண்டுகள் காலதாமதம் ஆகியுள்ளது என மின்வாரியம் தரப்பு தெரிவித்தது.
அறுந்து கிடந்ததிலிருந்து மின்சாரம் தாக்கிய நேரம்வரை அதிகாரிகள் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதற்கு மின்வாரிய தரப்பில் விளக்கம் இல்லை. மின் கம்பிகளை ஆய்வு செய்து முன்னெச்சரிக்கையுடன் இருந்திருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர் ரூ.5 லட்சம் இழப்பீடு பெற உரிமை உண்டு. அத்தொகையை மனுதாரருக்கு மின்வாரியம் வழங்க வேண்டும். இதை நிறைவேற்றியது குறித்து ஏப்.23ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.