/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கோயில் அருகே கொட்டும் குப்பையால் பக்தர்கள் அவதி
/
கோயில் அருகே கொட்டும் குப்பையால் பக்தர்கள் அவதி
ADDED : ஜூலை 11, 2025 03:50 AM
டி.கல்லுப்பட்டி: டி.கல்லுப்பட்டி பேரூராட்சி பகுதி குப்பையை தேவன்குறிச்சி அக்னீஸ்வரர் கோயில் அருகே கொட்டுவதால் பக்தர்கள் அவதியுடன் கோயிலுக்கு செல்கின்றனர்.
இப்பேரூராட்சியில் சேகரிக்கும் குப்பையை மட்கும் குப்பை, மட்காத குப்பை என தரம்பிரிக்க உரப்பூங்கா 2 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இங்கு மட்கும் குப்பையை மண்புழு உரமாகவும், மட்காத குப்பையை அரைத்து விற்பனை செய்தும் வந்தனர். பூங்கா 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை நல்ல முறையில் செயல்பட்டது.
தற்போது இந்த உரப்பூங்காவை பயன்படுத்தாமல் குப்பையை, நீர்நிலைகளிலும், கோயில் அருகிலும் கொட்டுவது ஏனென்று தெரியவில்லை. பேரூராட்சியின் 15 வார்டுகளிலும் குப்பையை சேகரிக்க டிராக்டர், லோடு வேன், 15 எலக்ட்ரிக் ஆட்டோக்கள் உள்ளன. பெரும்பாலான எலக்ட்ரிக் ஆட்டோக்கள் செயல்படாமல் வீணாகி வருகின்றன.
குப்பையை மலை அடிவாரத்தில் அமைந்துள்ள தேவன்குறிச்சி அக்னீஸ்வரர் கோயில் அருகே கண்டபடி கொட்டுகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. கோயிலுக்கு தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கொட்டிய குப்பையில் அவ்வப்போது தீவைப்பதால் அந்த நாற்றம் குடலை புரட்டுகிறது. இதனால் பக்தர்கள் முகம் சுளித்தவாறு சென்று வருகின்றனர்.
பக்தர்கள் சிலர் கூறுகையில், ''பாலிதீன் கழிவுகளை குவித்து தீவைப்பதால் நாற்றம் சகிக்க முடியவில்லை. குப்பையை உரப் பூங்காவில் கொட்டி பயனுள்ளதாக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.