ADDED : செப் 16, 2025 04:38 AM
மதுரை: மதுரை அரசு மருத்துவமனை ரத்தவங்கி அருகில் டயாலிசிஸ் அவசர சிகிச்சைக்கான வார்டை டீன் அருள் சுந்தரேஷ் குமார் துவக்கி வைத்தார். மருத்துவ கண்காணிப்பாளர் குமரவேல், மருந்தியல், சிறுநீரகவியல் துறைத்தலைவர்கள் செந்தில், மனோராஜன், ஆர்.எம்.ஓ., சரவணன், எ.ஆர்.எம்.ஓ., சுமதி கலந்து கொண்டனர்.
அதீத சர்க்கரை நோயுடன் பிற சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை உடனடியாக பல்நோக்கு சிறப்பு பிரிவு (எஸ்.எஸ்.பி.,) வளாகத்தில் உள்ள சிறுநீரகவியல் பிரிவில் சேர்க்க இயலாது. அதேநேரம் பழைய வளாகத்தின் அவசர சிகிச்சை பிரிவில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதாலும் டயாலிசிஸ் சிரமம் என்பதாலும் புதிதாக டயாலிசிஸ் வார்டு அமைக்க திட்டமிடப்பட்டது. பிற நோய்களுக்கும் சேர்த்து சிகிச்சை வேண்டும் என்பதால் செயற்கை சுவாசம் தேவைப்படாத நோயாளிகளுக்காக 12 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கழுத்துப்பகுதியில் இருந்து ரத்தத்தை சுத்திகரிக்கும் 4 (எச்.டி.,) இயந்திரங்கள், வயிற்றுப்பகுதியில் இருந்து சுத்திகரிக்கும் 8 (பி.டி.) இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இணைநோய் சிகிச்சை முடிந்த நிலையில் டயாலிசிஸ் மட்டும் தேவையெனில் எஸ்.எஸ்.பி., வளாகத்திற்கு நோயாளிகள் மாற்றப்படுவர்.