/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மகளிர் காங்., தலைவர்கள் தன்னிச்சையாக மாற்றம் மாவட்ட தலைவர்கள் அதிருப்தி
/
மகளிர் காங்., தலைவர்கள் தன்னிச்சையாக மாற்றம் மாவட்ட தலைவர்கள் அதிருப்தி
மகளிர் காங்., தலைவர்கள் தன்னிச்சையாக மாற்றம் மாவட்ட தலைவர்கள் அதிருப்தி
மகளிர் காங்., தலைவர்கள் தன்னிச்சையாக மாற்றம் மாவட்ட தலைவர்கள் அதிருப்தி
ADDED : ஆக 04, 2025 05:59 AM
மதுரை: தமிழக காங்.,கில் மாவட்ட தலைவர்களுக்கு தெரியாமல் 19க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மகளிர் காங்., தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இதனால் 'கட்சி நிகழ்ச்சிகளுக்கு அவர்களை அழைக்க மாட்டோம்' என மாவட்ட தலைவர்கள் போர்க்கொடி துாக்கியுள்ளது கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
மகளிர் காங்., மாநில தலைவியாக சையத் ஹசினா ஓராண்டுக்கு முன் பதவிக்கு வந்தார். மகளிர் காங்., கலைக்கப்பட்டது.
மகளிர் காங்.,கில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடத்த அகில இந்திய தலைமை உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் அதிக உறுப்பினர்களை சேர்க்கும் நிர்வாகிகளுக்கு மகளிர் அணியில் தலைவர் பதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
காஞ்சிபுரம், சிதம்பரம், சேலம், வேலுார், திருச்சி, மதுரை, நாகர்கோவில், விருதுநகர் உட்பட 19 மாவட்டங்களில் மகளிர் அணிக்கு புதிய தலைவர்களை சையத்ஹசினா நியமித்துள்ளார். இந்த நியமனங்கள் காங்., மாவட்ட தலைவர்களுக்கு தெரியவில்லை.
நிகழ்ச்சிக்கு அழைக்க மாட்டோம் இதனால் அதிருப்தியடைந்த அவர்கள், மகளிர் காங்கிரசார் தன்னிச்சையாக நியமித்த புதிய தலைவர்களை கட்சி நிகழ்ச்சிக்கு அழைக்க மாட்டோம் என போர்க்கொடி துாக்கியுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட தலைவர்கள் கூறியதாவது: கட்சியின் சார்பு அமைப்பு தான் மகளிரணி. புதிய பொறுப்புகள் நியமனங்கள் குறித்து மாவட்ட தலைவர்களிடம் ஆலோசிக்க வேண்டும்.
ஆனால் தற்போதைய தலைவர் சையத் ஹசினா 77 மாவட்ட தலைவர்களில் ஒருவரை கூட ஆலோசிக்காமல் தன்னிச்சையாக நியமித்துள்ளார். அவர் நியமித்துள்ள தலைவர் யார் என எங்களுக்கே தெரியவில்லை. ஒரு போராட்டத்திலும் பங்கேற்கவில்லை. அதிக உறுப்பினர்கள் சேர்த்தார்கள் என்ற அடிப்படையில் பதவி வழங்கப்பட்டுள்ளது. உறுப்பினர் சேர்க்கையின் உண்மைத் தன்மை எங்களுக்கு தான் தெரியும். புதிதாக நியமிக்கப்பட்டவர்களை வாழ்த்தி ஒட்டிய போஸ்டர்களில் மாவட்ட தலைவர் படம் கூட இடம் பெறவில்லை. கட்சி நிகழ்ச்சிகளுக்கு அவர்களை அழைக்க மாட்டோம். காங்., மாநில தலைமைக்கும் தகவல் தெரிவித்துவிட்டோம் என்றனர்.
சையத் ஹசினா தரப்பில் கூறுகையில், புதிய உறுப்பினர் சேர்க்கையை முறையாக நடத்தி அதிக உறுப்பினர் சேர்த்தவர்களுக்கு தலைவர் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
புரளி பேசுபவர்கள், வீட்டில் இருந்து அலைபேசியில் அரசியல் செய்பவர்கள், கட்சிப் பணியை சரியாக கவனிக்காதவர் மகளிரணியில் இருந்து களை எடுக்கப்பட்டுள்ளனர். அகில இந்திய தலைமை முடிவின்படி இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றனர்.

