மதுரை, : மதுரை நகர்ப்பகுதியில் வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்குவது தொடர்பாக கணக்கெடுக்க வருவாய் அலுவலர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் நகர்ப்பகுதி குடியிருப்போரின் நீண்டநாள் கனவு நனவாகிறது.
தமிழகத்தில் நகர்ப்பகுதிகளில் பலர் வீடுகளை கட்டி குடியிருக்கின்றனர். இந்த வீட்டுமனைகளில் பலவற்றுக்கும் பட்டா இருப்பதில்லை. நத்தம் புறம்போக்கு என்ற வகைப்பாட்டில் குடியிருப்போர் ஒருவரிடம் இருந்து வீட்டுமனையை கிரயப் பத்திரமாக வாங்கி இருப்பர். அவற்றுக்கு பெரும்பாலும் பட்டா இல்லாத நிலையே உள்ளது.
இவ்வாறு பல ஆண்டுகளாக வசிப்போருக்கு வீட்டுமனைப் பட்டா இல்லாததால் அவற்றை வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. இதையடுத்து நகர்ப் பகுதிகளில் நத்தம் புறம்போக்கு நில வகைப்பாட்டில் உள்ள மனைகளை கணக்கெடுக்க உள்ளனர். இதுகுறித்து ஆர்.டி,ஓ.,க்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில், ''கிராம நத்தம், நத்தம் பிரைவேட், ஐரோப்பியல் கோட்ரஸ் மற்றும் ஆட்சேபனையற்ற புறம்போக்கில் (அரசு புறம்போக்கு) வீடுகட்டி குடியிருந்து வரும் தகுதியான பயனாளிகளை கண்டறிய, கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், மண்டல துணைத்தாசில்தார், குறுவட்ட நிலஅளவர், வட்ட துணை ஆய்வாளர் ஆகியோர் களஆய்வு செய்து பட்டியல் தயார் செய்ய வேண்டும். களஆய்வில் கண்டறியும் தகுதியானோர் பட்டியலை நவ.30 மாலைக்குள் ஆர்.டி.ஓ.,க்களுக்கு அனுப்ப வேண்டும். இப்பணிகளை தொய்வின்றி செய்ய வேண்டும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வருவாய்த் துறையினர் குழு அமைத்து நீண்ட காலமாக வீடுகட்டியுள்ள மனைகளுக்கு பட்டா இல்லாதோரை கணக்கெடுக்கும் பணியில் களமிறங்க உள்ளனர். வருவாய்த்துறையினர் சிலர் கூறுகையில், ''சில மாதங்களுக்கு முன் கிராமப் பகுதிகளில் வீட்டுமனைப் பட்டா வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு மதுரை மாவட்டத்தில் பல ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. அதுபோல நகர்ப்பகுதியில் வழங்க வாய்ப்பு உள்ளது'' என்றனர்.
மதுரை வடக்கு தாசில்தார் மஸ்தான் கனியிடம் கேட்டபோது, ''நகர் பகுதியில் வீட்டுமனைப் பட்டா வழங்க தகுதியுள்ளோரை கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி கணக்கெடுக்க ஏற்பாடுகள் செய்து வருகிறோம். வீட்டுமனைப் பட்டா வழங்குவது குறித்து அரசுதான் முடிவு செய்யும்'' என்றார்.