/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் முதல்வர் ஸ்டாலின் விழாவில் தி.மு.க.,... ஒரே கல்லு; மூணு மாங்கா! லட்சம் பட்டாக்கள் 'டார்க்கெட்'டால் புகைச்சலில் அ.தி.மு.க.,
/
மதுரையில் முதல்வர் ஸ்டாலின் விழாவில் தி.மு.க.,... ஒரே கல்லு; மூணு மாங்கா! லட்சம் பட்டாக்கள் 'டார்க்கெட்'டால் புகைச்சலில் அ.தி.மு.க.,
மதுரையில் முதல்வர் ஸ்டாலின் விழாவில் தி.மு.க.,... ஒரே கல்லு; மூணு மாங்கா! லட்சம் பட்டாக்கள் 'டார்க்கெட்'டால் புகைச்சலில் அ.தி.மு.க.,
மதுரையில் முதல்வர் ஸ்டாலின் விழாவில் தி.மு.க.,... ஒரே கல்லு; மூணு மாங்கா! லட்சம் பட்டாக்கள் 'டார்க்கெட்'டால் புகைச்சலில் அ.தி.மு.க.,
ADDED : டிச 01, 2025 05:39 AM

மதுரை: மதுரையில் டிச.7 ல் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் நலத்திட்ட விழாவில் ஒரு லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்க தி.மு.க., ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக 50 ஆண்டுகளாக பட்டா இல்லாதவர்களையும் அதிகாரிகள் தேடிப்பிடிக்கும் பணி தீரவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பிரமாண்ட விழா
சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு ஏப்ரலில் நடக்கவுள்ளது. மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான 'அசைன்மென்டை' அமைச்சர் மூர்த்திக்கு தி.மு.க., தலைமை வழங்கியுள்ளது. இந்நிலையில் மதுரையில் ஜூன் 1 ல் நடந்த தி.மு.க., பொதுக் குழுக் கூட்டத்தை விட பிரமாண்டமாக டிச.7 ல் நலத்திட்டங்கள் வழங்கும் விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இதில், வீட்டுமனை பட்டாக்கள் மட்டும் ஒரு லட்சம் பேருக்கு வழங்கப்படவுள்ளது. அதற்காக மாவட்ட நிர்வாகம் பயனாளிகளை தேடி வருகிறது.
எதிர்பார்க்கும் எண்ணிக்கையில் பயனாளிகள் கிடைக்காவிட்டால் பல ஆண்டுகளாக பட்டாக்கள் எதிர்பார்க்கும் வீட்டுவசதி, குடிசைமாற்று வாரிய வீடுகளில் குடியிருப்போருக்கும் பட்டாக்கள் வழங்க 'லிஸ்ட்'டில் சேர்க்கப்படுகின்றனர். இதற்காக 'செட்டில்மென்ட்' பட்டா வழங்கும் சிறப்பு ஜி.ஓ.,க்கள் வெளியிடவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுதவிர தனியார் அபார்ட்மென்ட்களுக்கும் குடியிருப்போர் விருப்பம் அடிப்படையில் கூட்டுப்பட்டாக்கள் வழங்கவும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதன்மூலம் 10 தொகுதிகளிலும் பல ஆண்டுகளாக கிடைக்காத பட்டாக்களை வழங்குவது, அதன் மூலம் தேர்தலில் ஓட்டுக்களை பெறுவது, முதல்வரிடம் நல்ல பெயர் பெறுவது என 'ஒரே கல்லில் மூன்று மாங்காய்'களை தி.மு.க., அடிக்கவுள்ளது என அ.தி.மு.க., உள்ளிட்ட எதிர்கட்சியினர் புகைச்சலுடன் விமர்சனம் செய்ய துவங்கியுள்ளனர்.
மேலும் மாநகராட்சியில் 100 வார்டுகளில் மக்களுக்கு 24 மணிநேரமும் குடிநீர் கிடைக்கும் வகையிலான ரூ.1609.69 கோடியில் முல்லை பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம், ரூ.150 கோடியில் மேலமடை மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் இந்நிகழ்ச்சியில் முதல்வர் துவக்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் மூர்த்தி கூறியதாவது: டிச. 7 விழாவில் 50 ஆயிரம் சுயஉதவிக் குழுவினருக்கு கடனுதவி உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த 1.67 லட்சம் பயனாளிகளுக்கு நலத் திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்.
முதன்முறையாக மாநகராட்சி பகுதியில் குடிசைமாற்று, வீட்டுவசதி வாரிய வீடுகளில் குடியிருக்கும் 50 ஆயிரம் பேருக்கு 'செட்டில்மென்ட்' பட்டாக்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக சிறப்பு அரசாணைகள் (ஜி.ஓ.,) வெளியிட ஏற்பாடு செய்யப்படுகிறது. சிறப்பு முகாம்கள் மூலம் சர்வே எடுக்கப்படுகிறது. இதனால் வங்கிக் கடன் உள்ளிட்டவை பெற்று மக்கள் பயனடைய முடியும். டிச.7க்குள் செட்டில்மென்ட் பட்டாக்கள் முழுவதும் வழங்க முடியாவிட்டாலும், ஜனவரிக்கு முன் அனைவருக்கும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

