ADDED : நவ 13, 2024 05:26 AM
உசிலம்பட்டி : மதுரை மாவட்டம் சேடபட்டி அருகே அ.தி.மு.க.,வினரை, அ.ம.மு.க., வினர் தாக்கிய சம்பவத்தில் தி.மு.க., துாண்டுதலின் பேரில் நடந்ததாக தெரிவித்த அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி மீது போலீசில் தி.மு.க., புகார் செய்துள்ளது.
உசிலம்பட்டி டி.எஸ்.பி., அலுவலகத்தில் தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் அளித்த புகார்: கடந்த நவ.10 ல், சேடபட்டி அருகே மங்கல்ரேவில் அ.தி.மு.க., மாவட்டச் செயலாளர் உதயகுமார், அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரனை கீழ்தரமாக பேசியதாக கூறி அ.ம.மு.க. ஒன்றியச் செயலாளர் பழனிச்சாமி தரப்பினருக்கும், அ.தி.மு.க., உதயகுமார் தரப்பினருக்கும் நடந்த மோதலில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இருதரப்பினரும் போலீசில் புகார் செய்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தை கண்டித்து அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி தனது முகநுால், எக்ஸ் தளத்தில், தி.மு.க.,வினரின் துாண்டுதலின் பேரில் இச்சம்பவம் நடந்ததாக பதிவு செய்துள்ளார். தி.மு.க.,வின் மீது பொய்யான அவதுாறு பரப்பிவரும் அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

