ADDED : ஜூலை 01, 2026 11:17 PM

திருமங்கலம்: மணல் அள்ளுவதில் ஏற்பட்ட முன்விரோதத்தில், தி.மு.க., நிர்வாகி வெட்டி கொல்லப்பட்டார்.
மதுரை மாவட்டம், இலுப்பங்குளத்தைச் சேர்ந்தவர் கலாநிதி, 35. கள்ளிக்குடி தி.மு.க., ஒன்றிய முன்னாள் இளைஞரணி செயலர். இவருக்கு மனைவி, 1 வயதில் ஆண் குழந்தை உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, கள்ளிக்குடியில் இருந்து டூ - வீலரில் கே.சென்னம்பட்டியைச் சேர்ந்த நண்பர் ஹரிஹரன், 30, உறவினர் அஜித், 25, ஆகியோருடன் குராயூர் சென்றார்.
சோளம்பட்டி, குதிரை கோவில் அருகே சென்ற போது, காரில் வந்த ஒரு கும்பல், டூ - வீலரில் மோதியது. இதில், மூவரும் நிலை தடுமாறி விழுந்தனர். காரில் இருந்து அரிவாள் உட்பட ஆயுதங்களோடு இறங்கிய கும்பல், கலாநிதியை வெட்டி கொன்றது.
இதில், அஜித், ஹரிஹரனுக்கும் வெட்டு விழுந்த நிலையில், இருவரும் அங்கிருந்து ஓடி தப்பினர். கள்ளிக்குடி போலீசார் விசாரித்தனர்.
அதில், கலாநிதிக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பலுக்கும் ஆற்று மணல் அள்ளுவது தொடர்பாக முன்விரோதம் இருந்தது. இதையடுத்து, குராயூரைச் சேர்ந்த பிரகாஷ் உட்பட ஐந்து பேரை பிடித்து விசாரிக்கின்றனர்.
