/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தி.மு.க., உள்குத்து அரசியலால் மேயர் மாற்றத்தில் தடுமாற்றம் ஆர்வமில்லா அமைச்சர்களால் கட்சி தலைமையும் குழப்பம்
/
தி.மு.க., உள்குத்து அரசியலால் மேயர் மாற்றத்தில் தடுமாற்றம் ஆர்வமில்லா அமைச்சர்களால் கட்சி தலைமையும் குழப்பம்
தி.மு.க., உள்குத்து அரசியலால் மேயர் மாற்றத்தில் தடுமாற்றம் ஆர்வமில்லா அமைச்சர்களால் கட்சி தலைமையும் குழப்பம்
தி.மு.க., உள்குத்து அரசியலால் மேயர் மாற்றத்தில் தடுமாற்றம் ஆர்வமில்லா அமைச்சர்களால் கட்சி தலைமையும் குழப்பம்
ADDED : ஆக 14, 2025 04:43 AM
மதுரை:மதுரை மாநகராட்சியில் சொத்துவரி முறைகேடு புகாரில் மேயர் இந்திராணியின் கணவர் கைதான விவகாரத்திற்கு பின், 'மேயர் மாற்றம் இருக்கும்' என கட்சியினர் எதிர்பார்த்த நிலையில், அடுத்த மேயராக யாரை தேர்வு செய்வது என்ற குழப்பத்தால் தி.மு.க., தலைமை தயங்குகிறது.
மதுரை தி.மு.க.,வில் அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், மாவட்ட செயலாளர்கள் தளபதி, மணிமாறன் என நான்கு பிரிவாக ஆதரவாளர்கள் செயல்படுகின்றனர். மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேட்டில் சிக்கியவர்களில் நான்கு பேரின் ஆதரவாளர்களும் அடக்கம்.
மூர்த்திக்கு முற்றுப்புள்ளி இந்த முறைகேடு விவகாரத்தின் ஆரம்பத்தில் மூர்த்தி ஆதரவாளரான மண்டலம் 1ன் தலைவராக இருந்த வாசுகி பெயர் அடிபடவில்லை. மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் அமைச்சர் நேரு நடத்திய விசாரணையிலும் வாசுகியிடம் ராஜினாமா கடிதம் பெறவில்லை. ஆனால் அன்று இரவு முதல்வர் அலுவலகம் வெளியிட்ட ராஜினாமா கடித அறிவிப்பில், வாசுகியின் பெயர் உட்பட 5 மண்டலம், 2 நிலைக் குழு தலைவர்கள் பெயர்கள் இருந்தன.
இதன் பின்னணியில் அமைச்சர் மூர்த்திக்கு எதிராக சிலர் நடத்திய 'உள்குத்து அரசியல்' இருந்ததாக விமர்சனம் எழுந்தது. இதனால் மேயர் இந்திராணி மாற்றப்பட்டால் அவருக்கு பதில் வாசுகியை மேயராக கொண்டுவர வேண்டும் என்ற அமைச்சர் மூர்த்தியின் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
வெறுப்பான தியாகராஜன் இதுபோல் அமைச்சர் தியாகராஜன் ஆதரவாளர்களே மேயர், மண்டலம் 3ன் தலைவர் பாண்டிச்செல்வி, நிலைக்குழு தலைவர் விஜயலட்சுமி, கவுன்சிலர்கள் என மாநகராட்சியில் பதவிகளை பெற்றனர். ஆனால் சொத்துவரி முறைகேட்டில் மேயர் கணவர் முதல் மண்டலத் தலைவர் கணவர் மிசா பாண்டியன், நிலைக்குழுத் தலைவரின் கணவர் கண்ணன் என பலரும் சிக்கியுள்ளதால் அவர் கடும் அதிருப்தியில் உள்ளார். இதனால் தற்போது மேயர் மாற்றம் நடந்தால் தனது ஆதரவாளர் யாரையும் முன்நிறுத்தும் முடிவில் தியாகராஜன் இல்லை. இதுபோல் மதுரை நகர் தி.மு.க.,வில் பகுதிகள் பிரிப்பு, மாநகராட்சி மண்டல தலைவர்களுக்கே கட்சிப் பதவிகள் வழங்கியது போன்ற காரணங்களால் நகர் செயலாளர் தளபதி மீது கட்சித் தலைமை அதிருப்தியில் உள்ளது.
ஆர்வம் காட்டவில்லை இதுகுறித்து மதுரை தி.மு.க.,வினர் கூறியதாவது: மதுரை மேயர் மாற்றப்பட்டால் புதிய மேயராக யாரை தேர்வு செய்ய வேண்டும் என அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் என யாரும் பரிந்துரை செய்வதில் ஆர்வம் காட்டவில்லை. கட்சித் தலைமை மண்டலத் தலைவர்களை ராஜினாமா செய்ய உத்தரவிட்டதுபோல், மேயர் பதவியை பறிக்க தயங்குகிறது. இதற்கு காரணம், புதிய மேயரை தேர்வு செய்யும் வரை மாநகராட்சி பொறுப்பு துணைமேயர் வசம் செல்லும். துணைமேயராக மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த நாகராஜன் உள்ளார். தற்போது மதுரையில் தி.மு.க.,வுக்கும் மார்க். கம்யூ.,க்கும் அரசியல் ரீதியான முட்டல் மோதல்கள் நீடிப்பதால் உள்ளூர்தி.மு.க.,வினரின் எதிர்ப்பை கட்சித் தலைமை எதிர்கொள்ள வேண்டிவரும்.
இதனால் தான் மதுரை மேயர் மாற்றத்தில் தி.மு.க., தலைமை ஆர்வமில்லாமல் உள்ளது என கட்சியினர் தெரிவித்துள்ளனர்.