/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் போக்குவரத்து எஸ்.ஐ., மீது மீனாட்சி கோயில் ஊழியர் தாக்குதல்; சிபாரிசுக்கு வந்த தி.மு.க., எம்.எல்.ஏ., 'டென்ஷன்'
/
மதுரையில் போக்குவரத்து எஸ்.ஐ., மீது மீனாட்சி கோயில் ஊழியர் தாக்குதல்; சிபாரிசுக்கு வந்த தி.மு.க., எம்.எல்.ஏ., 'டென்ஷன்'
மதுரையில் போக்குவரத்து எஸ்.ஐ., மீது மீனாட்சி கோயில் ஊழியர் தாக்குதல்; சிபாரிசுக்கு வந்த தி.மு.க., எம்.எல்.ஏ., 'டென்ஷன்'
மதுரையில் போக்குவரத்து எஸ்.ஐ., மீது மீனாட்சி கோயில் ஊழியர் தாக்குதல்; சிபாரிசுக்கு வந்த தி.மு.க., எம்.எல்.ஏ., 'டென்ஷன்'
ADDED : டிச 16, 2025 08:01 AM
மதுரை: மதுரை எல்லீஸ்நகர் மீனாட்சி கோயில் 'பார்க்கிங்'கில் ஐயப்ப பக்தர்களுடன் வந்த அரசு பஸ்சை அனுமதிக்காதது குறித்து கேட்ட போக்குவரத்து எஸ்.ஐ.,யை, மீனாட்சி கோயில் ஊழியர் தாக்கினார். கட்சி ஆதரவு இருக்கிறது என்பதை காட்ட தன்னை அலைபேசியில் அழைத்த கோயில் ஊழியருக்கு தி.மு.க., எம்.எல்.ஏ., தளபதி 'டோஸ்' விட்டார்.
மதுரை எல்லீஸ்நகரில் மீனாட்சி அம்மன் கோயில் 'பார்க்கிங்' இடம் உள்ளது. ஐயப்ப சீசன் காரணமாக நுாற்றுக்கணக்கான வெளியூர் வாகனங்கள் இங்கு நிறுத்தப்படுகின்றன. இங்கிருந்து பக்தர்கள் ஆட்டோக்களிலும், அரசு பஸ்களிலும் கோயிலுக்கு சென்று வருகின்றனர்.
கோயிலில் இருந்து ஆட்டோக்கள், 'பார்க்கிங்'கிற்குள் வந்து பக்தர்களை இறக்கி விடுகின்றன. ஒரே நேரத்தில் இரு அரசு பஸ்களுக்கு உள்ளே அனுமதி இல்லை எனக்கூறி 'பார்க்கிங்' காவலர்களான கோயில் ஊழியர்கள் மறுத்து வருகின்றனர்.
இதனால் ரோட்டிலேயே பஸ்சை நிறுத்தி பக்தர்களை இறக்கிவிடுவதால் தினமும் அப்பகுதியில் கடும் நெரிசல் ஏற்படுகிறது.
நேற்றுமுன்தினம் காலை 11:00 மணியளவில் இதே காரணத்திற்காக போக்குவரத்து பாதித்தது. அப்போது பணியில் இருந்த போக்குவரத்து எஸ்.ஐ., சந்தானகுமார், பஸ்சை 'பார்க்கிங்'கிற்குள் அனுமதிக்குமாறு காவலாளி குணசேகரனிடம் பேசினார். 'ஒரு நேரத்தில் ஒரு அரசு பஸ்தான் விடமுடியும்' என கோயில் ஊழியர் 'கறாராக' கூறினார்.
இதுதொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட, 'நீங்கள் கோயில் ஊழியர் என்பதற்கான அடையாள அட்டை உள்ளதா' என எஸ்.ஐ., கேட்க, 'இருக்கிறது. அதை உங்களிடம் காட்ட வேண்டிய அவசியமில்லை' என குணசேகரன் கூறி, அடையாள அட்டையை மறைத்தார்.
அதை பார்க்க முயன்ற எஸ்.ஐ.,யை குணசேகரன் தாக்கி கீழே தள்ளினார். உடனடியாக தனக்கு தெரிந்தவர்களை அழைத்த குணசேகரன், எஸ்.ஐ., தன்னை தாக்க முற்பட்டதாக கூறினார். ஆனால் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் நடந்த சம்பவம் அனைத்தும் பதிவாகி உள்ளதாக எஸ்.ஐ., கூறியதால், உடனடியாக தி.மு.க., நகர் செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான தளபதியை அலைபேசியில் குணசேகரன் தொடர்பு கொண்டார்.
அவரிடமும், எஸ்.ஐ.,யிடமும் நடந்த விபரங்களை தளபதி கேட்டார். குணசேகரன் மீதுதான் தவறு உள்ளது என்பதை அறிந்து 'டென்ஷன்' ஆனார். குணசேகரனுக்கு கடுமையாக 'டோஸ்' விட்ட தளபதி, 'உடனே எஸ்.ஐ.,யிடம் மன்னிப்பு கேள்' என அறிவுறுத்தினார்.
குணசேகரனும் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தார். ஆனாலும் பணியின்போது அரசு ஊழியரான எஸ்.ஐ.,யை தாக்கிய குணசேகரன் மீது எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்யப்பட்டது. விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

