/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை மேயரை நியமிக்க முடியாத தி.மு.க., : இருமுனை 'தாக்குதலுக்கு' அ.தி.மு.க., தயார்
/
மதுரை மேயரை நியமிக்க முடியாத தி.மு.க., : இருமுனை 'தாக்குதலுக்கு' அ.தி.மு.க., தயார்
மதுரை மேயரை நியமிக்க முடியாத தி.மு.க., : இருமுனை 'தாக்குதலுக்கு' அ.தி.மு.க., தயார்
மதுரை மேயரை நியமிக்க முடியாத தி.மு.க., : இருமுனை 'தாக்குதலுக்கு' அ.தி.மு.க., தயார்
ADDED : நவ 27, 2025 09:06 AM

மதுரை: மதுரை அமைச்சர்களுக்குள் உள்ள ஈகோவால் மாநகராட்சி மேயர், 5 மண்டல தலைவர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்க முடியாத ஆளுங்கட்சியான தி.மு.க.,வை கண்டித்து விரைவில் அ.தி.மு.க., போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.
இம்மாநகராட்சியில் ரூ.150 கோடிக்கும் மேலான சொத்துவரி முறைகேடு விவகாரத்தால் தி.மு.க., மேயர் இந்திராணி பதவி விலகினார். முதல்வர் ஸ்டாலின் உத்தரவால் 5 மண்டல தலைவர்கள், 2 நிலைக் குழுத் தலைவர்களும் ராஜினாமா செய்தனர். இரு மாதங்களுக்கும் மேலாக மேயர், மண்டல தலைவர்களை தேர்வு செய்வதற்கான தேர்தலை அறிவிக்க முடியாமல் ஆளுங்கட்சி திணறுகிறது. அக்., நவ., மாதங்களில் மாமன்றக் கூட்டங்கள் நடக்காததால் நிர்வாகம் முடங்கும் நிலையுள்ளது.
தற்போது மழைக்காலம் என்பதால் மாநகராட்சி 100 வார்டுகளிலும் ரோடுகள், குடிநீர், பாதாளச் சாக்கடை பராமரிப்பு, சுகாதார பணிகளை மேற்கொள்வது பெரும் சவாலாகியுள்ளது. அவற்றை சரிசெய்ய முடியாமல் கவுன்சிலர்களும் தவிக்கின்றனர்.
ஆளுங்கட்சி அரசியல் மேயர் இல்லாத நிலையில் தற்போதுள்ள மார்க். கம்யூ., கட்சியின் துணைமேயர் தான் மாமன்றக் கூட்டத்திற்கான அழைப்பு விடுக்க வேண்டும். துணைமேயர் கூட்டத்தை நடத்தினால் தி.மு.க.,விற்கு அரசியல் ரீதியாக பின்னடைவாக போய்விடும் என்பதால் இரு மாதங்களாக மாமன்றக் கூட்டம் நடக்கவில்லை.
இதை கண்டிக்கும் வகையில் அ.தி.மு.க., எதிர்கட்சி தலைவர் சோலைராஜா தலைமையில் கவுன்சிலர்கள், வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மனுக்களை கமிஷனர் சித்ராவிடம் நேற்று அளித்தனர்.
சோலைராஜா கூறியதாவது: சொத்துவரி முறைகேடு தொடர்பாக அ.தி.மு.க., அடுத்தடுத்து நடத்திய போராட்டங்களால் மண்டல தலைவர்கள், மே யர் ராஜினாமா செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அவராலேயே நேர்மையான கவுன்சிலர்களை கண்டுபிடித்து அப்பதவிகளை நிரப்ப முடியவில்லை. மாவட்ட அமைச்சர்கள் தியாகராஜன், மூர்த்தி இடையே நிலவும் ஈகோவால் மாநகராட்சியே முடங்குகிறது.
நகரமைப்பு குழுவில் நடந்த ஊழல் புகாரில் அக்குழு கலைக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை அதுதொடர்பாக நடவடிக்கை இல்லை. ஊழல்களை ஆதரிக்கும் ஆட்சியாக உள்ளது. இவற்றை கண்டிக்கும் வகையில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி அனுமதி பெற்று மதுரையில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் இரண்டாவதாக, மேயரை நியமிக்க முடியாததால் வார்டுகளில் மக்கள் அவதிப்படுவது குறித்து நீதிமன்றம் சென்று முறையிடவும் சட்டரீதியாகவும் தயாராகி வருகிறோம் என்றார்.

