/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரோடுகளுக்கு தரச்சான்று இருக்கா: மார்க்சிஸ்ட் கம்யூ., கேள்வியால் தி.மு.க., கவுன்சிலர்கள் அதிர்ச்சி
/
ரோடுகளுக்கு தரச்சான்று இருக்கா: மார்க்சிஸ்ட் கம்யூ., கேள்வியால் தி.மு.க., கவுன்சிலர்கள் அதிர்ச்சி
ரோடுகளுக்கு தரச்சான்று இருக்கா: மார்க்சிஸ்ட் கம்யூ., கேள்வியால் தி.மு.க., கவுன்சிலர்கள் அதிர்ச்சி
ரோடுகளுக்கு தரச்சான்று இருக்கா: மார்க்சிஸ்ட் கம்யூ., கேள்வியால் தி.மு.க., கவுன்சிலர்கள் அதிர்ச்சி
UPDATED : ஜன 30, 2025 07:03 AM
ADDED : ஜன 30, 2025 05:46 AM

மதுரை: மதுரை நகரில் அமைக்கப்பட்டு வரும் புதிய தார் ரோடுகள் மிக மோசமாக உள்ளன. தரமில்லாததை கண்டித்து மக்களே போராடும் சூழல் ஏற்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட ரோடுகளுக்கு தரச்சான்று வாங்கப்பட்டுள்ளதா என மாநகராட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ., கேள்வி எழுப்பியது. தி.மு.க., கூட்டணியில் இருந்துகொண்டே இவ்வாறு கேள்வி எழுப்பியதால் மேயர் உட்பட தி.மு.க., கவுன்சிலர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இக்கூட்டம் மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் தினேஷ்குமார் தலைமையில் நடந்தது. துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நடந்த விவாதம் விவரம்:
வாசுகி, மண்டலம் 1 தலைவர்: குப்பை அள்ளும் வாகன தட்டுப்பாடு உள்ளதால் பணி பாதிக்கின்றன. போதிய தெரு விளக்குகள் இல்லை. மாநகராட்சி முன்பணம் செலுத்தாததால் மின்வாரியம் இணைப்பு வழங்கவில்லை. புதிய பாதாளச் சாக்கடை, குடிநீர் இணைப்புக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா.
சரவண புவனேஸ்வரி, மண்டலம் 2 தலைவர்: அம்ரூத் திட்டப் பணிகளால் சேதமடைந்த ரோடுகள் மறுசீரமைக்கப்படவில்லை. கேட்டால் திட்டமதிப்பீடு முடிந்து விட்டதாக கூறுகின்றனர். கலெக்டர் அலுவலகம், சர்க்கியூட் ஹவுஸ், எம்.எல்.ஏ., அலுவலகம் எங்கள் மண்டலத்திற்குள் உள்ளது. அதற்கெல்லாம் கூடுதல் துாய்மை பணியாளர்கள் தேவை. கூடுதல் பணியாளர் ஒதுக்க வேண்டும். அதுவரை வேறு பணிக்கு எங்கள் துாய்மை பணியாளர்களை கேட்டால் செல்ல அனுமதிக்க மாட்டேன்.
கமிஷனர்: அனுமதிக்க மாட்டேன் என சொல்லக் கூடாது. முக்கிய பிரமுகர்கள் வருகையின்போது கண்டிப்பாக ஒதுக்கியே ஆக வேண்டும். கூடுதல் பணியாளர் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும். சேதமடைந்த ரோடுகளை கணக்கெடுக்கும் பணியில் தனியார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. ஆய்வுக்கு பின் மறுசீரமைப்பு துவங்கும்.
சுவிதா, மண்டலம் 5 தலைவர்: விடுபட்ட வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் எப்போது வரும். எங்கள் மண்டலத்திலும் துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. பணிகள் பாதிக்கின்றன.
சோலை ராஜா, அ.தி.மு.க., எதிர்க்கட்சி தலைவர்: பெரியாறு கூட்டுக்குடிநீர் வீடுகளுக்கு எப்போது கிடைக்கும். 13 பிரதான கால்வாய்களை துார்வாரும் பணி எந்த நிலையில் உள்ளது. மழை நீர் கால்வாய்களுக்கு இடையே தொடர்பு சிதைந்துள்ளது. புதிய பாதாளச் சாக்கடை திட்டத்தில் நகரில் பெத்தானியாபுரம் உள்ளிட்ட பகுதிகள் விடுபட்டுள்ளன. மாநகராட்சி ஓ.எஸ்.ஆர்., இடங்கள் விவரம் வெளியிட வேண்டும். கலெக்டர் அலுவலக பஸ் ஸ்டாண்ட் அருகே ஜவஹர் தெருவில் உள்ள தனியார் மருத்துவமனை விதிமீறி கட்டப்பட்டதால் 'சீல்' வைக்க கலெக்டர், கமிஷனர் உத்தரவிட்ட நிலையில் தற்போது 7 மாடி அளவிற்கு கட்டப்பட்டுள்ளது. இதற்கு மாநகராட்சி அனுமதி உள்ளதா. வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதா.
கமிஷனர்: குடிநீர் திட்டம் மார்ச்சில் துவங்கிவிடும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கால்வாய்கள் துார்வாரும் பணிகள் நடக்கின்றன.
மேயர்: மாநகராட்சிக்கு உட்பட்ட பூங்கா உள்ளிட்ட ஓ.எஸ்.ஆர்.,இடங்கள் விவரம் மண்டல தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கவுன்சிலர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
விஜயா, மார்க்சிஸ்ட் கம்யூ.,: மாநகராட்சி பகுதிகளில் தார் ரோடுகள் மிக மோசமாக உள்ளன. ரோடுகள் நிலைமையால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். திருப்பரங்குன்றத்தில் போராட்டமே நடந்துள்ளது. புதிய ரோடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ரோடுகள் தரம் குறித்து உரிய துறை அதிகாரிகளிடம் தரச்சான்று வாங்கி உள்ளீர்களா. புதிதாக அமைக்கப்பட்ட பல ரோடுகள் பெயர்ந்து வருகிறது. கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. 100 வார்டுகளிலும் பொது நிதி, முதல்வர் சிறப்பு நிதியில் நடக்கும் பணிகள் விவரங்களை வெளியிட வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
கவுன்சிலர்கள் பலர் 'ஆப்சென்ட்' ஆகியதால் பெரும்பாலான இருக்கைகள் வெறிச்சோடின.