/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசு மருத்துவமனையில் உலா வரும் நாய்கள்
/
அரசு மருத்துவமனையில் உலா வரும் நாய்கள்
ADDED : ஜூலை 29, 2025 01:25 AM

மதுரை: மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் நாய்கள் சுதந்திரமாக உலா வருகின்றன.
சர்க்கரை நோயாளிகள் வார்டு, மனநலப்பிரிவு புறநோயாளிகள் வார்டு ரோட்டின் முன்புறத்தில் உள்ளதால் இங்கு எந்நேரமும் நாய்கள் படுத்து கிடக்கின்றன. சில நேரங்களில் வார்டு விசிட் செல்வது போல டீன் அலுவலக வளாகம், மத்திய ரத்த ஆய்வகம், ஐ.சி.யு., முன்பகுதி வரை சென்று பார்த்து விட்டு அங்கேயே சொகுசாக படுத்துக் கொள்கின்றன. காலை 7:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை ஆயிரக்கணக்கான நோயாளிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்லும் இடத்தில் நாய்கள் படுத்திருக்கும் போது இடைஞ்சலாக உள்ளது. யாரேனும் தெரியாமல் மிதித்து விட்டால் கடிக்க வருகின்றன.
மீனாட்சி அரசு கல்லுாரி வளாகத்திற்கு புகுந்த நாய் ஒன்று கடந்த வாரம் 5 மாணவிகளை கடித்தன. ஏற்கனவே நோயோடு போராடுபவர்கள் தான் மருத்துவமனைக்கு வருகின்றனர். வெளிப்புற வளாகத்தில் சுற்றிலும் பரவாயில்லை, எல்லைகளை கடந்து நாலா புறமும் பயணிப்பதால் நோயாளிகள் பயந்தபடியே கடந்து செல்கின்றனர்.
நாய் கடித்தால் தடுப்பூசி இலவசம் என்றாலும் தடுப்பூசிக்காக நான்கு முறை வந்து செல்வது பெருங்கொடுமை.
ஏற்கனவே ஒருமுறை மாநகராட்சி பிரிவினர் இங்கு வந்து நாய்களை பிடித்து கருத்தடை செய்தபின் இங்கேயே விட்டுச் சென்றனர். நாய்களுக்கு வாழ்விடப்பிரச்னை முக்கியம் என்றாலும் நோயாளிகளின் நலனும் முக்கியம் என்பதை மாநகராட்சி உணர வேண்டும்.

