ADDED : நவ 10, 2026 08:25 PM
மேலுார்: மேலுார் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் வசந்த் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
விவசாயிகள் கிருஷ்ணன், ராஜாமணி, அருண், துரைப்பாண்டி, பன்னீர்செல்வம், ராஜேஷ்வரன் பேசியதாவது: ஒருபோகம் மற்றும் இரு போகத்திற்கு ஒரே நேரத்தில் தண்ணீர் திறக்க வேண்டும். இருபோகத்திற்கு மட்டும் தண்ணீர் திறக்கக்கூடாது. ஒருபோக விவசாய சங்கத்தினரை கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும். குறைதீர்க்கும் கூட்டத்திற்கு நீர்வளத்துறை சார்பில் பெயரளவில் பதில் சொல்ல தெரியாத அதிகாரிகளுக்கு பதிலாக தாலுகா முழுவதிற்கும் பதில் தெரிந்த நீர்வளத்துறை உயர் அதிகாரிகள் வரவேண்டும். சிங்கம்புணரி நீட்டிப்பு கால்வாயை பராமரிக்காமல் பராமரித்ததாக நீர்வளத் துறையினர் தவறான தகவல் கொடுக்கின்றனர்.
விவசாயம் செய்ய நாற்றுகள் தயார் நிலையில் இருப்பதால் தண்ணீர் திறக்காவிடில் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மேலும் ஒருபோகத்திற்கு தண்ணீர் திறக்கா விடில் போராட்டம் நடத்தப்படும். தோட்டக்கலை துறையில் வாங்கும் தென்னங்கன்றுகள் பட்டு போவதால் தரமான தென்னங்கன்றுகள் வழங்க வேண்டும். கூட்டத்திற்கு வராத கொட்டாம்பட்டி பி.டி.ஓ., உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
