/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'சாக்கு போக்கு' வேண்டாம்! அதிகாரிகளிடம் 'கறார்' காட்டிய கலெக்டர்: தவறான நம்பிக்கை தரவேண்டாம் என எரிச்சல்
/
'சாக்கு போக்கு' வேண்டாம்! அதிகாரிகளிடம் 'கறார்' காட்டிய கலெக்டர்: தவறான நம்பிக்கை தரவேண்டாம் என எரிச்சல்
'சாக்கு போக்கு' வேண்டாம்! அதிகாரிகளிடம் 'கறார்' காட்டிய கலெக்டர்: தவறான நம்பிக்கை தரவேண்டாம் என எரிச்சல்
'சாக்கு போக்கு' வேண்டாம்! அதிகாரிகளிடம் 'கறார்' காட்டிய கலெக்டர்: தவறான நம்பிக்கை தரவேண்டாம் என எரிச்சல்
ADDED : நவ 28, 2025 07:53 AM

மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டத்தில் பேசிய கலெக்டர் பிரவீன்குமார் ''துறைசார்ந்த அதிகாரிகள் தவறான நம்பிக்கை தர வேண்டாம்; அதேபோல சாக்குபோக்கான பதில்களை சொல்லி கடந்து செல்லாதீர்கள்'' என்று கடிந்து கொண்டார்.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ., அன்பழகன், வேளாண் இணை இயக்குநர் முருகேசன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவபிரபாகரன், கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் சதீஷ்குமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக கழக மண்டல மேலாளர் சரவணன் கலந்து கொண்டனர்.
கண்மாய் கரை, வாய்க்காலில் ஆக்கிரமிப்பு அகற்றுவது, நெல் கொள்முதல் மையம் அமைப்பது, நெல் விற்பனைக்கு கமிஷன் கேட்பதாக புகார், இலவச மின் இணைப்பு கேட்பது என்பது போன்ற பல மாத, பல ஆண்டு கோரிக்கை மனுக்கள் நேற்றும் வாசிக்கப்பட்டன.
நீர்வளத்துறை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான மனுக்களுக்கு பெரும்பாலான தாசில்தார்கள், 'நடவடிக்கை எடுக்கப்படும். படிவம் 1 வழங்க வேண்டும்' எனவும், 'நேரில் சென்று பார்க்கிறேன். ஆக்கிர மிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என நீர்வளத்துறை அலுவலர்களும் பொதுவான பதில்களை தந்தனர். இதனால் கலெக்டர் எரிச்சலடைந்தார்.
'அதிகாரிகளை நான் பாதுகாக்கிறேன் என நினைத்துக் கொண்டு பொதுவான பதில்களை தரவேண்டாம். ஒவ்வொரு மனுவும் மாதந்தோறும் தொடர்கிறது. மனுவுக்கு பதில் அளிக்க 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. அப்படியிருந்தும் விவசாயியின் கேள்வியை கூட படிக்காமல் நிறைய அதிகாரிகள் இங்கு வருகிறீர்கள். கூட்டத்திற்காக விவசாயிகளுக்கு தவறான நம்பிக்கை தராதீர்கள். சாக்குபோக்கான பதில்களை சொல்ல வேண்டாம். எந்த விவசாயி என்ன கேள்வி கேட்கிறார் என்பதற்கான பதிலுடன் இங்கு வரவேண்டும். 2 முறை மனு கொடுத்தும் அதிகாரி நடவடிக்கை எடுக்காவிட்டால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
அதேபோல விவசாயிகள் குறித்து பேசிய கலெக்டர் 'மனுக்கள் வாசிக்கும் போது திசைதிருப்பும் வேலையை தவிர்க்க வேண்டும். அதிகாரி சரியான பதில் சொல்லாவிட்டால் நான் நடவடிக்கை எடுப்பேன். நீங்கள் அதிகாரியிடம் உத்தேசமாக பேசக்கூடாது' என்றார்.
குழப்பமான முறை விவசாயிகளின் கேள்விகளை வாசித்து அதன்பின்பே அதிகாரிகளின் பதில்கள் குறித்து விளக்கம் கேட்கப்படும். பெரும் பாலான கேள்வியை வாசிக்கவிடாமல் நேரடியாக அந்த அதிகாரி பதில் சொல்ல வேண்டும் என கலெக்டர் தெரிவித்ததால், மற்றவர்களுக்கு என்ன பிரச்னை என்று தெரியாமல் முழித்தனர்.
நீர்வளத்துறையே பொறுப்பு நீர்வளத்துறை ஆக்கிரமிப்பு தொடர்பான மனுக்களுக்கு 'சர்வேயர் அளவீடு செய்ய வேண்டும்' என்பதே பதிலாக இருந்ததால் டி.ஆர்.ஓ., அன்பழகன் கோபமடைந்தார். தேசிய நெடுஞ்சாலை, ரயில்வே துறைகளைப் போல நீர்வளத்துறையும் தங்கள் இடங்களை பாதுகாக்க வேண்டாமா. ஒவ்வொரு முறை சர்வேயர்கள் வந்து கண்மாய், கரை, வாய்க்காலில் ஆக்கிரமிப்பு அகற்றினாலும் மறுபடி இப்பிரச்னை வருகிறது. தாசில்தார், சர்வேயர், பி.டி.ஓ., அலுவலர்கள் மறுபடி மறுபடி நீர்வளத்துறை பிரச்னைக்கு வரமுடியுமா. நீங்கள் கல் ஊன்றி வைக்க வேண்டியது தானே. அல்லது போலீசில் புகார் கொடுங்கள் என்றார்.
நேற்றைய விவசாயிகள் குறைதீர் கூட்டம் கூச்சல், குழப்பம், வெளிநடப்புடன் முடிந்தது.
அடுத்தடுத்து வெளிநடப்பு
கூட்டம் தொடங்கியதும் கோரிக்கை மனு வாசிக்க ஆரம்பித்த போது கள்ளிக்குடி கல்லணை பகுதியைச் சேர்ந்த 20 பேர், கல்லணை, துாம்பக்குளம் புதுார், நெடுங்குளம், உலகாணி கிராம கல்குவாரிகளில் இருந்து வெளியேறும் துாசி, கழிவுத்துகள்களால் நீர்நிலைகள் மாசுபடுகின்றன. பொதுமக்கள், கால்நடைகள் சுவாசிக்க முடியவில்லை. குவாரிகளை நிரந்தரமாக மூடவேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர். கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த போதும் அரைமணி நேரம் கூட்டம் நடத்தவிடாமல் முன்பக்கம் நின்றனர். பின்னர் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர்.
அடுத்ததாக சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த 10 விவசாயிகள், நெல் கொள்முதல் மையத்தை முறையாக நடத்தவில்லை. கடந்தமாத மனுவுக்கு கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் தரவில்லை. இவ்வளவு அலட்சியமாக செயல்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்காததை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.

